தக்காளி குருமா (2)
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 அல்லது 3 பெரியது
வெங்காயம் - 1
கொத்தமல்லி நறுக்கியது - 1/4 கப்
புதினா - 5 இலை
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
முந்திரி - 8
பட்டை - ஒரு சிறு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் 1 1/2 தக்காளி சேர்த்து வதக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
மீண்டும் அதே பாத்திரத்தில் மீதம் உள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து மீதம் உள்ள பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பாதி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
குழைந்து வந்ததும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி சிறிது நீர் விடவும்.
அரைத்த வெங்காய தக்காளி விழுது சேர்த்து தேவையான நீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து எண்ணெய் பிரியும் போது ஊற வைத்த முந்திரியை அரைத்து ஊற்றவும்.
நன்றாக கொதித்து குருமா பதம் வந்ததும் கொத்தமல்லி சிறிது தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதில் முந்திரி அரைத்து ஊற்றாமல் அப்படியே வைத்தால் தோசை, இட்லிக்கு நன்றாக இருக்கும். அப்படி வைப்பதானால் காரம் இன்னும் குறைக்க வேண்டும்.
சப்பாத்திக்கு இன்னும் ரிச்சாக இருக்க முந்திரி சேர்த்திருக்கிறேன். முந்திரி பாதி, தேங்காய் துருவல் பாதி சேர்த்தும் அரைத்து சேர்க்கலாம்.
முந்திரிக்கு பதிலாக ஒரு தேக்கரண்டி பொட்டுக்கடலை தேங்காயுடன் சேர்த்தும் அரைக்கலாம்.
விரும்பினால் வெங்காயம் வதக்கும் போது ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து வதக்கலாம்.
இட்லி, தோசை, சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்.