புளிப்பு முறுக்கு
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - ஒரு படி
புளித்த மோர் - 1 கப்
சின்ன ஜவ்வரிசி - 1/4 படி
பச்சை மிளகாய் - 25
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
டால்டா - 100 கிராம்
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை தூசி இல்லாமல் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இதற்கு சின்ன ஜவ்வரிசிதான் பயன்படுத்த வேண்டும். கடைகளில் நைலான் ஜவ்வரிசி என்று கேட்டு வாங்கவும்.
பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் மோரை ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த ஜவ்வரிசியை மோருடன் மிக்ஸியில் போட்டு பொலபொலவென்று அரைக்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகை போட்டு தாளித்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசி மாவுடன் அரைத்த ஜவ்வரிசி கலவை, பச்சை மிளகாய் விழுது, பொரித்த கடுகு, உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.
பிறகு டால்டாவை வாணலியில் போட்டு உருக்கி கலவையில் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.
தேவையானால் கால் கப் தண்ணீர் சேர்த்து முறுக்கு பிழியும் பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.
முறுக்கு உரலில் மூன்று கண் உள்ள அச்சினைப் போட்டு அதில் பிசைந்த மாவை உரலில் மாவு கொள்ளும் அளவிற்கு நிரப்பிக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் சூடானதும் மாவு நிரப்பிய உரலை எடுத்து சுற்றிலும் முறுக்கு பிழியவும்.
ஒரு நிமிடம் கழித்து முறுக்கை கரண்டியால் திருப்பி போட்டு வேக வைக்கவும். பிறகு மீண்டும் ஒரு நிமிடம் திருப்பி போடவும்.
முறுக்கு லேசாக சிவந்து எண்ணெய் அடங்கியதும் அடுப்பில் இருந்து எடுத்து பரிமாறவும்.