பாசிப்பருப்பு தேங்காய்பால் முறுக்கு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 4 கப்
பாசிப் பருப்பு - 1 கப்
எள்ளு - 1 தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
சீனி - 3 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியில் தண்ணீர் ஊற்றி அலசி தண்ணீரை வடித்து வெய்யிலில் காயவைத்து மெஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். எள்ளை தூசியில்லாமல் சுத்தம் செய்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் பாசிப் பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு பருப்பை குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மேலும் அதிகமாக 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை நன்கு குழைய வேக வைக்கவும்.
வெந்த பருப்பில் உள்ள தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் போட்டு குழைய அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த பச்சரிசி மாவை போட்டு அதனுடன் வேகவைத்து அரைத்த பாசிப்பருப்பு மற்றும் சுத்தம் செய்த எள்ளை தண்ணீரில் அலசி அதில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் உப்பை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து அரிசி மாவில் ஊற்றி பிசையவும். மாவு முழுவதும் உப்பு சேரும்படி நன்கு பிசையவும்.
ஒரு பெரிய தேங்காயை துருவி எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு தேங்காய்க்கு 2 கப் பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் பாலுடன் சீனியை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பிறகு அரிசி மாவில் தேங்காய் பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து பிசையவும்.
பிறகு ஒரு கப் தண்ணீர் எடுத்து, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு தளர முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும். எள்ளுக்கு பதிலாக சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.
முறுக்கு உரலில் ஸ்டார் வடிவில் உள்ள அச்சியை போட்டுக் கொள்ளவும். பிறகு பிசைந்த மாவை ஆரஞ்சு பழ அளவில் உருண்டையாக உருட்டி முறுக்கு உரலில் வைத்து நிரப்பிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவு நிரப்பி வைத்திருக்கும் உரலை வைத்து எண்ணெய் முழுவதும் முறுக்கு பிழியவும். தனியாக ஒரு தட்டின் பின்புறத்திலோ அல்லது ப்ளாஸ்டிக் கவரிலோ பிழிந்து எடுத்து எண்ணெயில் போடலாம்.
முறுக்கு பிழிந்த சில நொடிகளில் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க ஒரு மெல்லிய கம்பி அல்லது கரண்டியை வைத்து முறுக்கை நகற்றி விடவும். ஒரு நிமிடம் கழித்து முறுக்கை திருப்பி போட்டு வேக விடவும். பிறகு மீண்டும் ஒரு நிமிடம் திருப்பி போட்டு வேக விடவும்.
எண்ணெய் அடங்கி முறுக்கு வெந்து பொன்னிறமானதும் முறுக்கில் உள்ள எண்ணெயை வடித்து எடுத்து எடுத்து பரிமாறவும்.