தட்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி (இட்லி அரிசி) - 1 கப்

பொட்டுக்கடலை - 1/4 கப்

கடலைப்பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி

பெருங்காயப் பவுடர் - 1/4 தேக்கரண்டி

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1 1/2 மேசைக்கரண்டி

கறுப்பு (அல்லது) வெள்ளை எள் - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

ரீஃபைண்ட் ஆயில் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியையும், கடலைப்பருப்பையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி ஊறியதும் தண்ணீர் ஊற்றி 3 முறை களைந்துவிட்டு, கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் போட்டு சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். ஊறிய கடலைப்பருப்பை நன்றாகக் களைந்து வைக்கவும்.

பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்துச் சலித்து வைக்கவும்.

அகலமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவைப் போட்டு, அதனுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, வெண்ணெய் (ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்), ஊற வைத்த கடலைப்பருப்பு, எள், மிளகாய்த் தூள், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் மற்றும் பெருங்காயப் பவுடர் சேர்த்துப் பிசையவும்.

பிசையும் போது மாவு மிகவும் தளர்வாக இருந்தால் அரை கரண்டி பச்சரிசி மாவு (தேவைப்பட்டால்) சேர்த்துப் பிசையலாம்.

ஒரு ப்ளாஸ்டி ஷீட்டில் எண்ணெய் தடவி வைக்கவும். (எண்ணெய் வரும் பாக்கெட்டை நறுக்கி, அதன் உள்பக்கத்தை இதற்கு பயன்படுத்தலாம்). கைகளில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி ப்ளாஸ்டிக் ஷீட்டில் தட்டையாகத் தட்டவும். (மிகவும் மெல்லியதாகவும் இல்லாமல், மொத்தமாகவும் இல்லாமல் ஒன்று போல தட்டி வைக்கவும்).

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீராகச் சூடேறியதும் தீயைத் தணித்து வைத்து, தட்டி வைத்திருக்கும் தட்டைகளை எடுத்து எண்ணெயில் போட்டு, தீயை அதிகரித்து மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும். சுவையான, மொறுமொறுப்பான தட்டை தயார்.

குறிப்புகள்:

தட்டையை எண்ணெயில் போட்டுப் பொரிக்கும் போது பொறுமையாக உடையாமல், பிய்ந்து விடாமல் கவனமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.