கோதுமை மசாலா வடை
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1 கப்
வெள்ளை உளுந்து - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை தேக்கரண்டி உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.
பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.
மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.