இலங்கை உளுந்து வடை
தேவையான பொருட்கள்:
உளுந்து - ஒரு சுண்டு
பெரிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 4
கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - சிறிதளவு
பூண்டு (நசுக்கியது) - 2 பல்
இஞ்சி (நசுக்கியது) - சிறிய துண்டு
கொதிதண்ணீர் (நகச்சூடு) - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உளுந்தை போட்டு அதன் மேல் ஒரளவு கொதித்தநீரை விடவும். (உளுந்தினை விட தண்ணீர் கூடுதலாக இருக்கவேன்டும்). அதன் பின்பு அதை (கால் -அரை) மணி நேரம் ஊறவிடவும்.
(கால்-அரை) மணித்தியாலங்களுக்கு பின்பு உளுந்தில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு அதை கிரைண்டரில்(மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும் (நன்றாக அரைக்ககூடாது)(அதிகளவு தண்ணீர் சேர்க்ககூடாது).
பின்பு அதனுடன் உப்பை சேர்த்து அரைக்கவும். (சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக கலக்காது). அதன் பின்பு உப்பு கலந்து அரைத்த உளுந்துடன் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, நசுக்கிய இஞ்சி ஆகியவற்றை கலக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து அதில் அரைவாசிக்கு எண்ணெய் விட்டு அதை நன்றாக கொதிக்கவிடவும்.
அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கையில் எடுத்து அதை ஓரளவு உருண்டையாக்கி அதை கையின் நடுப்பகுதியில் வைத்து ஓரளவு தட்டி அதன் நடுவில் ஓரளவு சிறிய துளை போடவும்.
கொதித்த எண்ணெயில் செய்த வடையை போடவும். இதே போல் கொஞ்ச வடைகளை செய்து போட்டு ஓரளவு மஞ்சள் நிறமாக பொரிக்கவும்.
பொரிந்த வடைகளில் உள்ள எண்ணெயை வடித்து விட்டு அதை சூட்டுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் மூடிவைக்கவும் (வடையின் உட்பகுதி நன்றாக அவிவதற்காக அப்படி செய்யாவிட்டால் வடையின் உட்பகுதி நன்றாக அவியாது).
அதன் பின்பு அதை எடுத்து திரும்பவும் கொதித்த எண்ணெயில் போட்டு நல்ல பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.