வெஜிடபிள் பிரியாணி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பசுமதி அரிசி - 2 கப்

சிறிய உருளைக்கிழங்கு - 6

கரட் - 2 (medium size)

வெட்டிய முட்டைகோவா - 2 கப்

பன்னீர் - 250 கிராம்

பம்பாய் வெங்காயம் - 2 பெரிது

தக்காளி - 2 (medium size)

பச்சைப்பட்டாணி - 1 கப்

பச்சை மிளகாய் - 5

ஏலக்காய் - 6

கராம்பு - 5

கறுவாப்பட்டை - 4" துண்டு

கஜு - 20

பிளம்ஸ் (Raisins) - 35 கிராம்

கொத்தமல்லித்தழை - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு

பட்டர் / நெய் - 3 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள் - சிறிது

செய்முறை:

பசுமதி அரிசியை கழுவி 10 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரினுள் மஞ்சள் தூளை போட்டு கொதிக்க வைக்கவும்.

கொதிக்கும் தண்ணீருள் ஊற வைத்த அரிசியை போட்டு குழைய விடாமல் உதிரும் பதத்தில் அவிக்கவும்.

அரிசி அரை பதம் வெந்ததும் அதனுள் சிறிது உப்பு, 2 மேசைக்கரண்டி பட்டர்/நெய்யை போட்டு கிளறவும்.

சாதம் அவிந்ததும் ஒரு தட்டையான தட்டில் கொட்டி பரப்பி மூடி வைக்கவும்.

தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

உருளைக்கிழங்கை நீளம், தட்டையான துண்டுகளாக வெட்டி சிறிது உப்பு, மிளகாய்த்தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும். (சிப்ஸ் போல)

பன்னீரையும் சிறு சதுர துண்டுகளாக வெட்டி உப்பில் புரட்டி பொரித்தெடுக்கவும்.

வெங்காயத்தை நீளமான சிறிய மெல்லிய துண்டுகளாக வெட்டி பொரித்தெடுக்கவும்.

பச்சைப் பட்டாணியை சிறிது உப்பு போட்டு அவித்து வைக்கவும்.

ஏலக்காய், கராம்பு, கறுவாப்பட்டையை சிறிது வறுத்து உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்து வைக்கவும்.

1 மேசைக்கரண்டி பட்டர்/நெய்யை சூடாக்கி அதில் பாதியாக பிளந்த கஜு, பிளம்சை போட்டு வறுத்து வைக்கவும்.

கரட்டை 1 அங்குல நீளமான சிறிய மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, பெரிய சீரகம் என்பவற்றை பொரிய விட்டு அதனுள் சிறிது உப்பு, நீளமாக வெட்டிய பச்சை மிளகாய், வெட்டிய கரட், முட்டைகோஸை போட்டு மூடி மிதமான நெருப்பில் 7/8 நிமிடங்கள் அவிய விடவும்.

பின்னர் அதனுள் வெட்டிய தக்காளியைப் போட்டு 4/5 நிமிடங்கள் கிளறவும்.

தக்காளி, கரட்+கோஸ் கலவையுடன் சேர்ந்ததும் அவித்த பட்டாணி, குற்றிய ஏலக்காய் கலவை, சாதம் என்பவற்றை கொட்டி கிளறவும்.

பின்னர் பொரித்த உருளை, பன்னீர், வெங்காயம் என்பவற்றைப் போட்டு கிளறவும்.

இறுதியாக பொரித்த கஜு, பிளம்சை போட்டு கிளறவும்.

சுவையான கம கம வெஜிடபிள் பிரியாணி தயார். இதனை ஒரு பரிமாறும் தட்டில் போட்டு மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

கரட், முட்டைகோஸை அவிய விடும் போது தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அத்தோடு அடிப்பிடிக்காமலும் கவனித்துக் கொள்ளவும். தனித் தனியே எல்லாவற்றிற்கும் உப்பு சேர்த்திருப்பதால் இறுதியாக உப்பு சேர்க்கத் தேவையில்லை. எனினும் உப்பு போதாதிருப்பதாக கருதினால் சுவைத்துப் பார்த்துவிட்டு தேவையான உப்பு சேர்க்கலாம். மற்றும் தேவையான உறைப்பிற்கேற்ப பச்சை மிளகாயை கூட்டி குறைக்கலாம்.

<br /><br />

<img src="files/pictures/biriyani_1.jpg" alt="Veg biriyani" />

<br />