மெக்ஸிகன் சிக்கன் கேசரோல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - முக்கால் கிலோ

கருப்பு நிற பீன்ஸ் - ஒரு கேன்

புளித்த க்ரீம்(sour cream) - நான்கு கோப்பை

ரெடிமேட் சோள ரொட்டி - பனிரெண்டு

துருவிய சீஸ் - இரண்டு கோப்பை

பச்சைமிளகாய் - இரண்டுதேக்கரண்டி

சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி

சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி

மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி

உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி

சால்சா தயாரிக்க:

தக்காளி - நான்கு

சிவப்பு வெங்காயம் - ஒன்று

பூண்டு - இரண்டு பற்கள்

கொத்தமல்லி - ஒரு பிடியளவு

ஜாலபீனோ பெப்பர்

(அ)பச்சைமிளகாய் - இரண்டு

உப்புத்தூள் - அரைதேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி.

செய்முறை:

முதலில் சால்சா செய்வதற்கான பொருட்களைச் பொடியாக நறுக்கி எலுமிச்சைச்சாற்றையும் சேர்த்து கலக்கி வைக்கவும்.

கோழியை நன்கு வேகவைத்து எலும்புகள் இல்லாமல், சிறிது சிறிதாக உதிர்த்துக் கொள்ளவும்.

ரொட்டிகளை நீளமான துண்டுகளாக வேண்டிய அளவிற்கு நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் உதிர்த்த கோழியைப் போட்டு அதனுடன் பீன்ஸ், புளித்த க்ரீம், ஒரு கோப்பை துருவிய சீஸ், பச்சைமிளகாய் மற்றும் எல்லாத் தூளையும் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

பிறகு பேக்கிங் செய்யும் பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள ரொட்டியில் பாதியை பரவலாகப் போடவும்.

அதை தொடர்ந்து கலக்கிய கோழியில் பாதியை பரவலாகப் போட்டு அதன் மீது தயாரித்துள்ள சால்சாவில் பாதியை போடவும்.

பிறகு அதன் மீது மீதியுள்ள ரொட்டிதுண்டுகளை பரவலாக வைத்து மீதியுள்ள கோழிக்கலவையைப் போட்டு மீதியுள்ள சால்சாவையும் போடவும்.

பின்பு மீதியுள்ள ஒரு கோப்பை துருவிய சீஸை பரவலாக தூவி விடவும்.

அவனை 350 டிகிரி Fல் வைத்து சூடானவுடன் தயாரித்துள்ள கேசரோலை வைத்து வேக விடவும்.

முப்பது நிமிடங்கள் கழித்து, சீஸ் நன்கு சிவந்தவுடன் வெளியில் எடுத்து ஒரு பத்து நிமிடங்களுக்கு ஆற வைத்து, அதன் பிறகு துண்டுகள் போட்டு பரிமாறவும்.

தேவையான பொருட்கள் பெரும்பாலும் ரெடிமேடாக உள்ளதால் தயாரிப்பதற்கு மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருக்கும்.

குறிப்புகள்: