முந்திரிக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை முந்திரிப்பருப்பு - 30

தேங்காய் (துருவியது) - கால் கப்

செத்தல் மிளகாய் - 10

மல்லி - 2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

புளி - தேசிக்காயளவு

பெருங்காயம் - சுண்டைக்காய் அளவு

பச்சைகச்சான் - 100 கிராம்

நெய் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - ருசிக்கேற்ப

கறிவேப்பிலை - சிறிதளவு

தாளிக்க:

கறுவாபட்டை - சிறிதளவு

பெருஞ்சீரகம் - சிறிதளவு

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

பச்சை முந்திரிக்கொட்டையை நெருப்பு தணலில் போட்டு சுடவும்.

அதன்பின்பு இரண்டாக நறுக்கி கத்தியால் கவனமாக முந்திரிப்பருப்பை பேர்த்து எடுத்து கொள்ளவும்.

கொதிதண்ணீரில் இந்த பருப்பை போட்டு சிறிது நேரத்தின் பின்பு அதன் தோலை உரித்து கொள்ளவும்.

புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற விட்டுக் கரைத்து கொள்ளவும்.

செத்தல்மிளகாய், மல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் இவற்றை எண்ணெயில் வறுத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

தேங்காய் துருவலை விழுதாக அரைத்துகொள்ளவும்.

அதன் பின்பு சிறிதளவு நெய்யில் உரித்த முந்திரிப் பருப்புடன் கச்சானை சேர்த்து வறுத்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்.

அடுப்பில் தாட்சியை வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கறுவாபட்டை, பெருஞ்சீரகம் தாளித்து அதில் புளிக்கரைசலை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.

அதன் பின்பு இக்கலவை கொதித்து நுரைத்து வரும் போது அரைத்து வைத்தவற்றை சேர்த்து கொள்ளவும்.

ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதை சேர்த்து கொள்ளவும். நன்றாக கொதித்ததும் வேகவைத்த முந்திரிப்பருப்பு கச்சான் கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதித்ததும் இறக்கி அதில் கருவப்பிலை சேர்த்து சிறிது நேரத்தின் பின்பு பரிமாறவும்.

குறிப்புகள்:

முந்திரிக்குழம்பு கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், இரும்பு, உயிர்சத்து A,B1,B2,B3,B5,B6, B9,C, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீஸியம், சோடியம், கால்சியம் ஆகியவை நிறைந்த ஒர் உணவுப்பொருள். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - பச்சை முந்திரிக்கொட்டையை நெருப்பு தனலில் போட்டு சுடவும்.பின்பு இரண்டாக நறுக்கி கத்தியால் கவனமாக முந்திரிப்பருப்பை பேர்த்து எடுத்து கொள்ளவும்