மஞ்சள் நீராட்டு புட்டு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 500 கிராம்
வெல்லம் - 500 கிராம்
தண்ணீர் - 300 மி. லிட்டர்
தேங்காய் - ஒன்று
ஏலக்காய் - 5 கிராம்
உளுத்தம்மா - 100 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
கொதிதண்ணீர் - தேவையானளவு
நெய் - 250 கிராம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை நீரில் கழுவி சுத்தம் செய்து அதில் உள்ள நீரை முழுவதும் வடித்து விடவும்.
அதன் பின்பு ஈரமான அரிசியை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். (அரைக்கும் மெஷினில் கொடுத்தும் அரைக்கலாம்).
அரைத்த ஈரமான(பச்சை)மாவினை தூய்மையான வெள்ளைத்துணியில் கட்டி இட்லி தட்டில் வைக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதனுள் பாத்திரத்தின் முக்கால் அளவு தண்ணீர் விட்டு அதன் மேல் இட்லி தட்டை வைத்து ஆவியில் வேகவிடவும்.
மா வெந்தவுடன் காய்ந்து இருக்கும் (ட்ரையாக இருக்கும்). அதன் பின்பு வெந்த மாவில் உப்பு, உளுத்தம்மா, கொதி தண்ணீர் சேர்த்து அதை புட்டு பதத்திற்கு குழைக்கவும் (சிறு சிறு உருண்டைகளாக).
குழைத்தமாவை நீத்து பெட்டியில் அல்லது புட்டுகுழலில் (ஸ்டீமரில்) வைத்து நீராவியில் அவிக்கவும்.
புட்டு அவிந்ததும் அதை இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்(சூட்டுடன்).
ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேங்காயை துருவி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அதனுடன் தண்ணீர் விட்டு அதை நன்றாக கரைக்கவும்.
அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அது சூடானதும் அதில் கரைத்த வெல்லத்தை ஊற்றி பிசுக்கு பத பாகு காய்ச்சவும்.
பிசுக்கு பத பாகு பதம் வந்தவுடன் அந்த பாகில் தேங்காய்துருவல், ஊறியகடலைப்பருப்பு, ஏலக்காய்த்தூள் போட்டு கிளறவும்.
தேங்காய்துருவலில் உள்ள தண்ணீர் வற்றி மறுபடியும் பிசுக்கு பதம் வந்தவுடன் பாகை இறக்கவும்.
அதன்பின்பு வெந்தபுட்டுடன் நெய் விட்டு அதனுடன் காய்ச்சிய பாகை சேர்த்து கிளறவும். இப்போது மஞ்சள் நீராட்டு புட்டு தயாராகி விட்டது. பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு பரிமாறவும்.
குறிப்புகள்:
இலங்கையில் உள்ள பெண்குழந்தைகள் பூப்பெய்தும் போது தினமும் மஞ்சள் நீராட்டு புட்டை சாப்பிட கொடுப்பது வழக்கம் அத்துடன் இப்புட்டை செய்து தலையை சுற்றியும் தீட்டு கழிப்பதும் வழக்கம். இப் புட்டில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் A B1, B2, B3, B4, B5, B9, B11 ஆகிய பல சத்துகள் அடங்கியுள்ளது. கவனிக்க வேண்டிய விஷயங்கள் - வெந்தமாவில் உப்பு, உளுத்தம்மா, கொதிதண்ணீர் சேர்த்து புட்டுபதத்திற்கு குழைக்கவும்(சிறுசிறுஉருண்டைகளாக). அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அது சூடானதும் அதில் கரைத்த வெல்லத்தை ஊற்றி பிசுக்கு பத பாகு காய்ச்சவும். மாற்று முறை -குழைத்தமாவை நீத்து பெட்டியில் அல்லது புட்டுகுழலில் (ஸ்டீமரில்) வைத்து நீராவியில் அவிக்கவும். எச்சரிக்கை - சர்க்கரை நோயுள்ள குழந்தைகளுக்கும், இருதயநோயுள்ள குழந்தைகளுக்கும், வைத்தியரின் ஆலோசனைப்படி பரிமாறவும்.