பொரியல் கத்தரிக்காய்
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் (பெரிது) - 2
உப்புத்தூள் - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
உள்ளி - (2 - 3) பல்
ஒலிவ் எண்ணெய் - 2 கப்
லெமென் சாறு - 2
கறிவேப்பிலை(சிறிதுசிறிதாகவெட்டிய) - தேவையானளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் கத்தரிக்காயை போட்டு நன்றாக கழுவவும். கழுவிய கத்தரிக்காயினை ஒரு துணியால் நன்றாக துடைக்கவும்.
துடைத்த பின்பு ஒரு பலகையில் கத்தரிக்காயை வைத்து ஓரளவு தடிப்பான வட்டமாக வெட்டவும். ஓரளவு தடிப்பான வட்டமாக வெட்டிய கத்தரிகாயில் ஒரு துண்டை எடுத்து அதன் வெள்ளைநிற பாகத்தில் கத்தியால் குறுக்கு குறுக்காக பல கோடுகளை ஒரளவு ஆழத்திற்கு கீறவும்.
கோடுகள் கீறிய பின்பு அதில் உப்புத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை தூவவும் (கத்தரிக்காயில் உப்புத்தூள், மிளகுத்தூள் நன்றாக தூவப்பட்டிருக்க வேண்டும்).
தூவிய பின்பு இதனை ஒரு தட்டில் வைக்கவும். ஒரு பலகையில் உள்ளியை(பூண்டு) வைத்து அதனை கத்தியால் சிறு சிறு துண்டுகளாக நன்றாக வெட்டவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலி) வைத்து அதில் ஒலிவ் எண்ணெயை ஊற்றி அதை சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் வெட்டி வைத்துள்ள உள்ளியை(பூண்டினை) போட்டு அதில் உள்ள சாறு வெளியே வருமாறு நன்றாக கரண்டியால் நசிக்க வேண்டும்.
உள்ளி ஓரளவு பொரிந்ததும் அதில் உப்புத்தூள் மிளகுத்தூள் பூசிய கத்தரிக்காயை போட்டு நன்றாக கலந்து பொரிக்கவும்.
கத்தரிக்காயை நன்றாக பொரித்த பின்பு அதன் மேல் லெமென் சாறினை பிழிந்து அதை தூவி 2 நிமிடங்களின் பின்பு கத்தரிக்காய் பொரியலை தாட்சியில்(வாணலியில்) இருந்து எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறியசிறிய துண்டுகளாக வெட்டிய கறிவப்பிலையை தூவி அலங்கரிக்கவும்.
குறிப்புகள்:
கத்தரிக்காய் கூடுதலாக கொலஸ்ட்ரோலின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். கத்தரிக்காயைசாறு பிழிந்து எடுத்து காலின் வீக்கத்தை குறைப்பதற்கு பூசிக் கொள்வார்கள் அத்துடன் வியர்வையை தடைசெய்ய கத்தரிக்காயைசாறு பிழிந்து எடுத்து உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் பூசுவார்கள் கத்தரிக்காய் போஷாக்கு நிறைந்த உணவாகையால் ஏழைகளின் இறைச்சி என்று கூட சொல்வார்கள். கத்தரிக்காயில் நீர், புரதம், கால்சியம், கார்போஹைட்ரேட், நார்த்தன்மை, பாஸ்பரஸ், கொழுப்பு, கால்சியம், வைட்டமின் B1, B2, C, அயன் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளது. இப்படிப்பட்ட கத்தரிக்காயில் செய்யப்பட்ட பொரியலில் மேற்குறிப்பிட்ட சகல சத்துகளுடன் உள்ளி(பூண்டு), உப்பு, மிளகு, ஒலிவ், லெமென் அகியவற்றின் சுவையும் சேர்ந்து மிகமிக சுவையாக காணப்படும். அத்துடன் இது செய்வதிற்கு இலகுவானதும் ஆகும் இந்த கத்தரிக்காய் பொரியலை ஜெர்மனிய மக்கள் விரும்பி உண்பார்கள். இதன் சுவையை இதனை செய்து பார்த்து அறியவும். எச்சரிக்கை - கத்தரிக்காய் அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்