தாய்லாந்து சீ ஃபுட் சூப் ( டாம் யாம் தாலே)
தேவையான பொருட்கள்:
வஞ்சிரம் மீன் - முள்ளில்லாத சதைப்பகுதி ஒரு துண்டு - 50 கிராம்
இறால் - 15
நண்டுக்கால் - 2
மஷ்ரூம்(காளான்) - 8
பச்சை இஞ்சி - ஒரு துண்டு
லெமன் கிராஸ் - 2
எலுமிச்சை மர இலைகள் -4
எலுமிச்சை பழம் - ஒன்று
சீனி - 2 தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
பிஷ் சாஸ் - ஒரு டீ ஸ்பூன் (கிடைத்தால் நல்லது. இல்லாவிடில் சுவை பெரிதாக மாறாது)
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
மீன், இறால், நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
லெமன் கிராசை (அடிப்பக்கம்) வெள்ளைப்பகுதியை வெட்டி எடுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
இஞ்சியை மெலிதான துண்டுகளாக நறுக்கவும். காய்ந்த மிளகாயை பொடி செய்து கொள்ளவும்.
காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
எலுமிச்சையை சாறு பிழிந்து தனியாக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு தவிர மற்ற அனைத்தையும் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்தவுடன் எலுமிச்சை சாறை உடனடியாக சேர்க்கவும்.
செய்வது மிக சுலபம். பொருட்கள் அத்தனையும் கிடைத்தால் எளிதாக செய்து விடலாம்.
குறிப்புகள்:
தாய்லாந்து நாட்டின் மிகவும் பிரசித்திப்பெற்ற சூப் வகை இது. இந்த சூப் பார்ப்பதற்க்கு எந்தவித நிறமும் இன்றி க்ளியராக இருக்கும். ஆனால் புளிப்பு, காரம், மணம் அத்தனையும் நிறைந்தது.
தாய்லாந்தில் காலங்கால் (Galanggal) என்ற இஞ்சி வகையைதான் பயன் படுத்துவார்கள். இந்தியாவில் கிடைப்பதாக தெரியவில்லை. மாங்காய் இஞ்சி என்று கிடைக்கும். அதை பயன்படுத்தலாம். இது இரண்டுமே கிடைக்காவிட்டால் மட்டுமே சாதாரண இஞ்சியை உபயோகப்படுத்தவும். லெமன் கிராஸ்(Lemon Grass) சூப்பர் மார்க்கெட்டுகளில்(Food world)கிடைக்கும். கிடைக்காவிடில் எலுமிச்சை இலைகளை அதிகம் சேர்க்கவும். Fish Sauce சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். இந்த சூப் சளித் தொந்தரவுக்கு நல்லது.