செந்தோல் (Chendhol)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

செந்தோல் செய்வதற்கு :

ப‌ச்சைப்ப‌ட்டாணி மாவு‍ - 50 கிராம்

சோற்று இலை(பாண்டான் இலை)பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி

சோற்று இலை எசன்ஸ் - 2 தேக்கரண்டி

ப‌ச்சை ஃபுட் க‌ல‌ர் ப‌வுட‌ர் - ஒரு துளிய‌ள‌வு

த‌ண்ணீர் - 250 மில்லி

ஐஸ் வாட்ட‌ர் - சுமார் ஒரு லிட்ட‌ர்

ஐஸ் கட்டிகள் - சுமார் 500 மில்லி த‌ண்ணீரில் உறைய‌ வைத்த‌ 2 பாக்கெட்டுக‌ள்

க‌ருப்ப‌ட்டி பாகு செய்வதற்கு :‌

க‌ருப்ப‌ட்டி(ப‌னை வெல்ல‌ம்) - 250 கிராம்

சைனா க‌ற்க‌ண்டு(Rock Sugar) - 100 கிராம்

த‌ண்ணீர் - 200 மில்லி

சோற்று இலை - 3

ம‌ற்ற‌ பொருட்க‌ள் :

(திக்கான) தேங்காய்ப்பால் - 100 மில்லி

(வேக வைத்த) ராஜ்மா - 2 தேக்கரண்டி

சோற்று இலை எசன்ஸ் - அரை தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

தூள் பண்ணிய ஐஸ் - சுமார் 150 மில்லி

செய்முறை:

முதலில் அடிகன‌மான ஒரு பாத்திரத்தில் பச்சைப்பட்டாணி மாவுடன் தண்ணீரை சிறிது சிறிதாக‌ கலந்து, கட்டிகள் இல்லாமல் மிருதுவாக குழைக்கவும்.

அதனுடன் சோற்று இலை பேஸ்ட், சோற்று இலை எசன்ஸ், பச்சைக்கலர் பவுடர் அனைத்தையும் சேர்த்து கூழ் போன்று நன்கு கலந்துக்கொள்ளவும்.

பிற‌கு அப்ப‌டியே அந்த‌ பாத்திர‌த்தை மித‌மான‌ தீயில் வைத்து கைவிடாம‌ல் கிண்ட‌வும்.

க‌ல‌வை திக்காகி, சற்று ப‌ளிங்கு போன்று பளபளப்பாக மாற‌ ஆர‌ம்பிக்கும்போது அடுப்பிலிருந்து இற‌க்க‌வும்.

ஒரு பாத்திர‌த்தில் ஐஸ் வாட்ட‌ரை நிர‌ப்பி, உறைய‌ வைத்த‌ 2 ஐஸ் பாக்கெட்டுக‌ளையும் அத‌னுள் போட்டு, அத‌ன் மேல் ச‌ற்று பெரிய‌ ஓட்டைக‌ள் கொண்ட‌ ஜார‌ணி அல்ல‌து பிடி ச‌ல்ல‌டையை வைத்து, ஒரு ஆப்பைய‌ள‌வு செந்தோல் க‌ல‌வையை அள்ளி ஜார‌ணியில் வைத்து, ஒரு மரக்கரண்டியால் அழுத்த‌மாக‌ தேய்க்க‌வும்.

இப்போது கீழேயுள்ள‌ ஐஸ் வாட்ட‌ரில், த‌டிம‌னான‌ நூடுல்ஸ் துண்டுக‌ள் போன்று செந்தோல் இற‌ங்கும்.அவை ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாத‌ ப‌டி அவ்வ‌ப்போது மெதுவாக ஐஸ் வாட்டருக்குள் ந‌க‌ர்த்திவிட‌வும்.

இப்ப‌டியே க‌ல‌வை முழுவ‌தும் தேய்த்து எடுத்த‌ பிற‌கு, ஐஸ் வாட்ட‌ரை வ‌டித்துவிட்டு, சோற்று இலை எசன்ஸ் ம‌ற்றும் உப்பு கலந்த தேங்காய்ப்பால் சேர்த்து ஃப்ரிஜ்ஜில் வைக்க‌வும்.

அடுத்து, க‌ருப்ப‌ட்டி மற்றும் சைனா கற்கண்டை லேசாக இடித்து, இன்னொரு பாத்திர‌த்தில் போட்டு, வாச‌ இலையை பொடிதாக‌ ந‌றுக்கி, த‌ண்ணீர் சேர்த்து கொதிக்க‌வைக்க‌வும். எல்லாம் ந‌ன்கு க‌ரைந்து பாகு ப‌த‌ம் வ‌ந்த‌வுட‌ன் வ‌டிக‌ட்டி ஆற‌விட‌வும்.

ஒரு ப‌ளிங்கு கப்பில் வேக வைத்த ராஜ்மா 2 தேக்கரண்டி அளவு போட்டு, தயார் பண்ணி வைத்துள்ள செந்தோல் - தேங்காய்ப்பால் 2 ஆப்பைய‌ள‌வு ஊற்றி, ஐஸ் க‌ட்டிக‌ளை தூளாக்கி அத‌ன் மேல் தூவி, அத‌ற்கு மேல் க‌ருப்ப‌ட்டி பாகு அரை க‌ப் ஊற்றி, மெதுவாக‌ கிள‌றிவிட்டு சில்லென்று ப‌ரிமாற‌வும்.

குறிப்புகள்:

இது மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளில், பெரும்பாலும் தெருவோர கடைகளில் விற்கப்படும். வெயில் காலங்களில் அந்த மக்களால் மிகவும் விரும்பப்படக்கூடியது, மிகவும் பிரசித்திப்பெற்றது.

வெந்த‌ ராஜ்மாவை நாம் வேறு ச‌மைய‌லுக்காக‌ செய்யும் போது சிறிது எடுத்து வைத்துக் கொண்டால், செந்தோல் செய்யும் போது சுல‌ப‌மாக‌ இருக்கும். அல்ல‌து ஒரு பிடி ம‌ட்டும் போட்டு, சிறிது உப்பு சேர்த்து த‌னியாக‌ வேக‌வைத்துக் கொள்ள‌லாம். சிலர் வெந்த சோளமும் ஒரு தேக்கரண்டி சேர்ப்பார்கள். செந்தோல் ச‌ற்று கூடுத‌லாக‌ செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொண்டால், தேவைப்ப‌டும்போது மிக‌வும் சுல‌ப‌மாக‌ இருக்கும். செந்தோல், தேங்காய்ப்பால், க‌ருப்ப‌ட்டி பாகு, வெந்த‌ ராஜ்மா எல்லாமே ரெடிமேடாக‌ சில‌ இட‌ங்க‌ளில் கிடைக்கும். அப்ப‌டி கிடைக்கும் ப‌ட்ச‌த்தில் 5 நிமிட‌ங்க‌ளில் செந்தோல் ரெடிப‌ண்ணி, ஃப்ரிஜ்ஜில் கூல் ப‌ண்ணி சாப்பிட‌லாம். இதில் கூல் ட்ரிங்க்ஸ் போல் செய்து சாப்பிடும் போது ராஜ்மாவோ சோள‌மோ சேர்க்க‌க்கூடாது.