சிக்கன் சூப்
தேவையான பொருட்கள்:
சிக்கன் (வெட்டி சுத்தம் செய்ததுண்டுகள்) - 250 கிராம்
பெருஞ்சீரகம்(சோம்பு) - ஒரு தேக்கரண்டி
மிளகு - 3 தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
சின்னசீரகம்(சீரகம்) - ஒரு தேக்கரண்டி
மல்லி(தனியா) - ஒரு தேக்கரண்டி
செத்தல்மிளகாய் (காய்ந்தமிளகாய்) - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) - 4 பற்கள்
சின்னவெங்காயம் - 2
தக்காளிப்பழம் - ஒன்று
கருவப்பட்டை(பட்டை) - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தயிர் - சிறிதளவு
தண்ணீர் - சிறிதளவு
செய்முறை:
ஒரு சிறியபாத்திரத்தில் தயிர், உப்பு, தண்ணீர், ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கினால் மோராகிவிடும் .
பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தமாக்கிய சிக்கன் துண்டுகளை போட்டு அதன் மேல் மோரை விடவும். இதில் உள்ள மோர் கலவையினால் சிக்கனை நன்றாக கழுவவும்.
பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும். தாட்சி(வாணலி)சூடானதும் அதில் சின்னசீரகம்(சீரகம்), மல்லி(தனியா), செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) கடலைப்பருப்பு, மிளகு ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்கவும்.
நன்றாக வறுத்த பின்பு அதில் வெந்தயத்தை போட்டு கலக்கவும். கலந்த பின்பு இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.
இவையாவும் ஆறிய பின்பு இதனை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு மாவாக்கவும் (பவுடராக்கவும்).
பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து அதனை சூடாக்கவும். தாட்சி (வாணலி) சூடானதும் அதில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் மோரில் கழுவிய சிக்கனை போட்டு வதக்கவும்.
வதக்கிய சிக்கனுடன் நறுக்கிய தக்காளிப்பழம், சின்ன வெங்காயம், உள்ளி(பூண்டு), கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
பின்பு இவற்றுடன் மாவாக்கியவற்றை (பவுடராக்கியவற்றை) போட்டு நன்றாக கலக்கவும்.
கலந்த பின்பு இதனுடன் (2-3) டம்ளர் தண்ணீர் விட்டு அதனுடன் உப்பு போட்டு இவையாவற்றையும் நன்றாக வேகவிடவும்.
பின்பு அடுப்பில் இன்னொரு தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும்.
சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் பெருஞ்சீரகம்(சோம்பு), கருவப்பட்டை(பட்டை), கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு இவற்றை சிக்கனில் போட்டு கலக்கவும். அதன் பின்பு அதனை இறக்கி வைத்துவிடவும்.
தாட்சியை(வாணலியை)இறக்கிய பின்பு சுவையான, சத்துகள் நிறைந்த சிக்கன் சூப் தயாராகிவிடும்.
சிக்கன் சூப் தயாராகிவிட்ட பின்பு இதனை சூப் பரிமாறும் கோப்பையில் ஊற்றி பரிமாறவும்.
குறிப்புகள்:
சிக்கன் சூப் உடல் வலியை தீர்க்ககூடியதும், மழை, குளிர் காலங்களுக்கும் ஏற்றதும் சுவையானதும் சக்தி(Energy) ஈரப்பதம்/நீர்Moisture), புரதம்(Protein), கொழுப்பு(Fat), தாதுக்கள்(Minerals), கால்சியம்(Calcium), பாஸ்பரஸ்(Phosporous), ரைப்போஃப்ளேவின்(Riboflavin), போலிக் அமிலம்(Folic acid) ஆகிய சத்துகள் நிறைந்ததும் ஆகும். ஆகவே இதில் உள்ள சத்துகளையும் சுவையையும் அறிய சிக்கன் சூப்பை செய்து சாப்பிட்டு அறியவும்.