கொரியன் ஜின்செங் சிக்கன் சூப்
தேவையான பொருட்கள்:
சூப்பிற்கு:
முழு கோழி (டெண்டெர் சிக்கன் - அளவில் சிறியது) - 1
இஞ்சி - 1/2 இன்ச் துண்டு சுத்தம் செய்து சிறியதாக கட் பண்ணிகொள்ளவும்.
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
உலர்ந்த மலை எலந்தப்பழம் (ஜுஜுபி)-2
ஜின்செங் வேர் (சிறியது - rootlets)
பெப்பர் பௌடர் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - 10 கப்
அடைக்க (ஸ்டஃபிங்):
அரிசி - 1/2 கப் (ஸ்வீட் அண்ட் ஸ்டிக்கி ரைஸாக இருந்தால் நன்றாக இருக்கும்)
பூண்டு - 4 பல்
செஸ் நட் - 4
உலர்ந்த மலை எலந்த பழம் (ஜுஜுபி)-3
ஜின்செங் வேர் -2 - சுத்தம் செய்து சிறியதாக கட் பண்ணிகொள்ளவும். ரூட்லெட்டை (Rootlets) சூப்பிற்கு பயன்படுத்திக்கொள்ளவும்.
அலங்கரிக்க (கார்னிஷ்):
ஸ்ப்ரிங் ஆனியன் - 1 - வெட்டி வைத்துக்கொள்ளவும்.
முட்டை -1 : முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு இவைகளை தனித்தனியாக பிரித்து ஃப்ரை பண்ணி நீளவாக்கில் (சிறிய கீத்துகளாக) துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
அரிசியை கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கோழியை (முழு கோழியாகவே) சுத்தம் செய்துவிட்டு, உட்புறமும், வெளிப்புறமும் சிறிது உப்பு தடவி 15- 20 நிமிடம் ஊற விடவும்.
பின் கோழியினுள் அரிசி மற்றும் அடைக்க கொடுத்துள்ளவற்றை வைத்து அடைத்து நூல் வைத்து தைத்து விடவும் அல்லது சிறிய மர குச்சி (பல் குத்த பயன்படுத்தப்படும்) கொண்டும் கேவிட்டியை மூடி விடலாம்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் கோழியை வைத்து, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, தீயை அதிகப்படுத்தி, எண்ணெய் பிரிந்து, பொங்கி வரும் வரை கொதிக்க விடவும்.
பின் தீயை குறைத்து, அரிந்த இஞ்சி துண்டுகளை சேர்த்து, ஒரு மணி நேரம் வேக வைக்கவும்.
பின் இஞ்சி துண்டுகளை எடுத்து விட்டு, பூண்டு, ஜின்செங்கின் சிறிய வேர், மலை இலந்தை இவைகளை சேர்த்து மேலும் 30 நிமிடம் கொதிக்கவிடவும். தண்ணீர் தேவையெனில் சுடு தண்ணீர் சேர்க்கவும்.
இறக்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் நல்லெண்ணெயை சேர்க்கவும்.
பின் தயாராக வைத்திருக்கும் முட்டை கீத்து மற்றும் பொடியாக அரிந்த ஸ்ப்ரிங் ஆனியனால் அலங்கரித்து பரிமாறவும்.
இப்பொழுது சுவையான சூடான சூப் தயார். சூப் அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். தேவையெனில், மிளகு தூளும், உப்பும் சேர்த்து சாப்பிடலாம், சுவை கூடுதலாக இருக்கும்.
அதேபோல், கோழி துண்டுகளை (போர்க் கொண்டு எடுத்தால், ஈஸியாக பிரிந்து வரும், ரொம்ப ஷாஃப்ட்டா இருக்கும் சாப்பிட) யும் (அப்படியே சாப்பிடலாம்) கூடுதல் சுவைக்காக உப்புடன் கலந்த வறுத்த வெள்ளை எள்ளுடனும் சாப்பிடலாம் (எனக்கு ரொம்ப பிடி[க்கும்]த்தது).
குறிப்புகள்:
தென்கொரியாவில் கோடை காலத்திற்கென்றே உள்ள சிறப்பு உணவு இது. கோடையில் ஏற்படும் சூட்டையும், புழுக்கத்தையும் தணிக்கக்கூடிய சிறப்பு உணவாம் இது. கோடையில் ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லோரும் இதை தவறாமல் சாப்பிடுகிறார்கள். ஆனால், எல்லா நாட்களிலும் இது கிடைக்கும். இவ்வுணவு வேண்டுமெனில் ஒரு மணி நேரத்திற்கு முன்னே ஆர்டர் சொல்லி விட வேண்டும். இதன் சூட்டிற்கும், சுவைக்கும் குளிர் காலங்களில் சாப்பிட நன்றாகவே இருக்கும். ஆனால், கொரியன்ஸ் இதை சம்மரில்தான் சாப்பிட வேண்டும் என்பார்கள்.
கொரியன் ஜின்செங்: மருத்துவ குணம் கொண்டது. தென் கொரியாவின் தேசிய சொத்து என்றும் கூறலாம். ஆனால் விலை கொஞ்சம் அதிகம். இந்த வேரினை கொண்டு, சிறப்பு வகை டீ, கேண்டி, பானங்கள் முதலியவை தயாரித்து விற்கப்படுகின்றது. இந்த வேரினைக்கொண்டு தாயரிக்க பட்ட பொருட்களை அன்பளிப்பாக கொடுப்பதும் (வாங்கிக்கொள்வதும்) மிகவும் ஃப்ரிஸ்டேஜாக கருதப்படுகிறது.