கருணைக்கிழங்கு பிரட்டல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு - 1/2 அல்லது 250- 300 கிராம்

வெட்டிய வெங்காயம் - 3 மேசைக்கரண்டி

வெட்டிய உள்ளி - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 1 நெட்டு

கறித்தூள் - 1 மேசைக்கரண்டி

பெரிய சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

உப்பு

புளி - நெல்லிக்காயளவு

தேங்காய்ப்பூ - 1/2 கப்

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

கருணைக்கிழங்கை தோல் சீவி சிறிய குற்றிகளாக (~1cm கனம்) வெட்டி உப்பு நீரில் நன்கு கழுவவும்.

புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

தேங்காய்ப்பூவினுள் 1/4 கப் தண்ணீர் விட்டு பிழிந்து பாலை தனியாக எடுத்து வைக்கவும்(முதற்பால்).

மீண்டும் அதே பிழிந்த தேங்காய்ப்பூவினுள் 1/2 கப் தண்ணீர் விட்டு பிழிந்து பால் எடுக்கவும். (இரண்டாம் பால்)

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கருணைக்கிழங்கு துண்டுகளை சிவக்க பொரித்து(deep fry) எடுக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அதனுள் வெங்காயம், உள்ளி, பச்சை மிளகாய், கடுகு, பெரிய சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் வெந்தயம், பொரித்த கருணைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு புளிக்கரைசல், இரண்டாம் தேங்காய்ப்பால், கறித்தூள், உப்பும் போட்டு மூடி கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் தேங்காய் முதற்பாலை விட்டு கலக்கி மீண்டும் கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு தடித்து வறண்டதும் (எண்ணெய் பிறக்கும்) இறக்கவும்.

சுவையான கருணைக்கிழங்கு பிரட்டல் தயார். இதனை சோறு, இடியப்பம், புட்டு, பாண், ரொட்டி என அனைத்து உணவுகளுடனும் பக்க உணவாக சாப்பிடலாம்.

குறிப்புகள்:

இலங்கையில் பொதுவாக அனைத்து கறி, குழம்புகளுக்கும் தேங்காய்ப்பால் விடுவது வழக்கம். தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவையாக இருக்கும். தேங்காய்ப்பால் விட விரும்பாதவர்கள் இரண்டாம் பாலிற்கு பதில் தண்ணீரில் அவிய விட்டு முதற்பாலுக்கு பதில் 2 - 3 மேசைக்கரண்டி பசும்பால் விட்டும் செய்யலாம். (குளிர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர் அப்படித்தான் செய்கிறார்கள்:) )