எலுமிச்சம்பழ ஊறுகாய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலுமிச்சம்பழம் - 20

காய்ந்த மிளகாய் - 15-20

வெந்தயம் - 1 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

10 எலுமிச்சம்பழத்தை எடுத்து நன்றாக கழுவவும்.

எலுமிச்சம்பழத்தை 4 துண்டுகளாக மேலிருந்து கீழாக 3/4 பாகம் வரை கத்தியால் வெட்டவும்.

முதலில் ஒரு பாதியை விரித்து உப்பை வைக்கவும். பின்பு மறு பாதியை விரித்து உப்பை வைக்கவும்.

எலுமிச்சம்பழத்தை அமத்தி மூடி ஒரு ஜாடியில் அல்லது கண்ணாடிப் போத்திலில் வைத்து ஒரு நாள் முழுக்க மூடி வைக்கவும்.

மறு நாள் எடுத்து வெயிலில் காய வைக்கவும். ஜாடியையும் வெயிலில் வைக்கவும்.

மாலையில் சிறிதளவு உலர்ந்திருக்கும். அதை எடுத்து மீண்டும் ஜாடியில் வைத்து மூடி விடவும்.

அடுத்த நாள் காலையில் மீண்டும் காய வைக்கவும். மீண்டும் மாலையில் ஜாடியில் வைக்கவும்.

அப்படியே 5 அல்லது 6 நாட்கள் வெயிலில் நன்கு உலரும் வரை வைக்கவும்.

நன்கு உலர்ந்த பின்பு மீதம் உள்ள எலுமிச்சம்பழத்தை பிழிந்து எடுக்கவும்.

காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருஞ்சீரகத்தை தனித்தனியாக வறுத்து பொடி செய்யவும்.

பிழிந்து வைத்துள்ள எலுமிச்சம்பழச் சாற்றில் பொடித்தவற்றையும், மஞ்சள் பொடியும், சிறிதளவு உப்பும் சேர்த்து நன்றாகக் கலந்து உலர்ந்த எலுமிச்சம்பழத்தில் ஊற்றி கலந்து விடவும்.

2 நாட்கள் மூடி அப்படியே வைக்கவும். இடை இடையே மரக்கரண்டியால் பிரட்டி விடவும்.

சுவையான எலுமிச்சம்பழ ஊறுகாய் தயார்.

பின்பு தேவையான போது எடுத்து சோறு, புட்டுடன் சாப்பிடலாம்.

குறிப்புகள்:

இது வெயிலில் காயவைத்து செய்யப்படும். நீண்ட நாட்கள் வைத்துப் பாவிக்கலாம். இலங்கையில் இம் முறைப்படி தான் செய்வார்கள்.

எலுமிச்சம்பழத்தை பிழிந்து கலக்கும் போது ஜாடியில் உள்ள எலுமிச்சம்பழத்தின் மேல் சாறு இருக்க வேண்டும். சில எலுமிச்சம்பழத்தில் சாறு குறைவாக இருக்கும். அப்படியிருந்தால் மேலதிகமாக எலுமிச்சம்பழம் தேவைப்படும். ஊறுகாய் எடுக்கும் போது ஈரமில்லாத கரண்டி பாவிக்க வேண்டும். அப்பொழுதான் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். ப்ளாஸ்டிக் அல்லது மரக்கரண்டி பாவியுங்கள்.