இலங்கை மிளகாய்த்தூள்
தேவையான பொருட்கள்:
செத்தல்மிளகாய் (காய்ந்தமிளகாய்) - 250 கிராம்
மல்லி(தனியா) - 250 கிராம்
சின்னசீரகம்(சீரகம்) - ஒரு மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு) - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்துண்டு - ஒரு சிறியதுண்டு
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
அரிசி - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கருவாப்பட்டை(பட்டை) - சிறிய துண்டு
செய்முறை:
மல்லியை(தனியாவை) துப்பிரவு செய்துகழுவி அதனை ஒரு தட்டில் போட்டு நன்றாக காயவிடவும்.
நன்றாககாய்ந்த(ஈரமில்லாமல்)மல்லியை(தனியாவை) ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
செத்தல்மிளகாயை(காய்ந்தமிளகாயை)துப்பிரவாக்கவும்.
பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதனை சூடாக்கி அதில் செத்தல்மிளகாயை(காய்ந்த மிளகாயை)போட்டு அதனை ஓரளவாக வறுக்கவும்.
ஓரளவு வறுத்த செத்தல்மிளகாயை(காய்ந்தமிளகாயை) எடுத்து ஒருதட்டில் போட்டு வைக்கவும்.
செத்தல்மிளகாயை(காய்ந்தமிளகாயை) 3 துண்டுகளாக வெட்டவும் (இலகுவாக கிரைண்டரில் (மிக்ஸியில்)அரைப்பதற்காக).
பின்பு அடுப்பில் உள்ள தாட்சியில்(வாணலியில்)மல்லி(தனியாவை) மெல்லிய சூட்டுடன் வறுக்கவும்.
மெல்லிய சூட்டுடன் வறுத்த மல்லியுடன்(தனியாவுடன்)மிளகு, சின்னசீரகம்(சீரகம்), பெருஞ்சீரகம்(சோம்பு), மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை, கறுவாப்பட்டை(பட்டை) ஆகியவற்றை போட்டு சிறிது நேரம் வறுக்கவும்.
வறுத்த பின்பு இதனை வறுத்த செத்தல்மிளகாயுடன்(காய்ந்த மிளகாயுடன்)போட்டு வைக்கவும்.
பின்பு அடுப்பில்உள்ள தாட்சியில் கடலைப்பருப்பை போட்டு ஓரளவு வறுக்கவும் .
வறுத்த கடலைப்பருப்பை செத்தல்மிளகாயுடன்(காய்ந்த மிளகாயுடன்) போடவும்.
அடுப்பில் தாட்சியை வைத்து அதில் கழுவி துப்பிரவு செய்த அரிசியை போட்டு வறுக்கவும்.
வறுத்த அரிசியை செத்தல் மிளகாயுடன்(காய்ந்த மிளகாயுடன்)போடவும்.
வறுத்த யாவற்றையும் சிறிது நேரம் ஆறவிடவும்.
ஆறிய பின்பு வறுத்து இரண்டாக வெட்டிய செத்தல் மிளகாய்(காய்ந்த மிளகாய்)வறுத்து வைத்திருக்கும் மல்லி(தனியா), மிளகு, சின்னசீரகம்(சீரகம்), பெருஞ்சீரகம்(சோம்பு), மஞ்சள்துண்டு, கறிவேப்பிலை, கருவாப்பட்டை ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு நன்றாக அரைக்கவும்.
நன்றாக அரைத்த பின்பு அதனை எடுத்து அரிதட்டில் போட்டு மா போல அரிக்கவும்.
நன்றாக அரித்த பின்பு அரிபடாமல் இருப்பவற்றை திரும்பவும் எடுத்து கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு அரைக்கவும்.
திரும்பவும் அரைத்தவற்றை எடுத்து அரிதட்டில் போட்டு மா போல அரிக்கவும்.
இப்படியே எல்லாவற்றையும் அரைக்கவும்.
எல்லாவற்றையும் அரைத்து முடிந்தபின்பு அரைத்தவற்றை சிறிது நேரம் ஆறவிடவும்.
சிறிது நேரத்தின் பின்பு ஆறியவற்றை எடுத்து ஒரு போத்தலில் போட்டு காற்று உட்புகாதவாறு மூடி வைக்கவும்.
அதன் பின்பு மிளகாய்த்தூள் தேவைப்படும் போது தேவையானளவில் எடுத்து பயன்படுத்தவும்.
குறிப்புகள்:
மிளகாயில் வைட்டமின் C சத்து காணப்படுகின்றது. இதில் காணப்படும் வைட்டமின் C சத்தானது தக்காளிப்பழத்தில் காணப்படும் வைட்டமின் C சத்தினை விட 9 மடங்கு அதிகமாகும். அப்படிப்பட்ட மிளகாயை காயவைத்த பின்பு பெறப்படுவதே செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) ஆகும். இப்படிப்பட்ட மிளகாயுடன் ஆயுள்வேதம், சித்த வைத்தியம், யுனானி, இருதயநோய், பல்சம்பந்தபட்ட நோய்கள், சளி, கோழை, இருமல், விஷமுறிவு போன்ற பல நோய்களுக்கும் பயன்படும் மிளகும், வயிற்றுப் பகுதியை சீரமைப்பதில் பங்காற்றும், கார்ப்பு இனிப்பு சுவையுடன், குளிர்ச்சித்தன்மையும், மணம் சுவை செரிமானத்தன்மைக்காக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிற சீரகத்தில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டின், நீர்சத்து, வைட்டமின் A,B2,B3,B6,B9,B12,M,C,E K, கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், பாஸ்பரஸ், சோடியம் பொட்டாஷியம் போன்ற பல சத்துகள் அடங்கிய சீரகமும் பலசத்துகள் அடங்கியதும் பல நோய்களை மாற்றக் கூடிய மஞ்சள் தூள், கறுவாபட்டை(பட்டை), கறிவேப்பிலை, கடலைப்பருப்பு ஆகியவையாவும் கலந்து சுவையுடன் செய்யப்பட்டது இலங்கை மிளகாய்த்தூள். எச்சரிக்கை - அல்சர்நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்றுமுறை - கிரைண்டரில்(மிக்ஸியில்அரைப்பதற்கு பதிலாக வறுத்தமிளகாயை மிளகாய்த்தூள் அரைக்கும் மில்லில் கொடுத்து அரைக்கலாம். கவனிக்க வேண்டிய விசயங்கள் -வறுக்கும் போது வறுக்கபடும் பொருட்கள் கருகாமல் வறுக்கவும், குழந்தைகளை வைத்து கொண்டு மிளகாய்த்தூளை தயாரிக்கவேண்டாம், மிளகாய்த்தூளை தயாரிக்கும் போது மிக மிக கவனமாக தயாரிக்கவும்.