அச்சாறு
தேவையான பொருட்கள்:
பச்சைமிளகாய் - 250 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
பப்பாசிக்காய் - 125 கிராம்
போஞ்சிக்காய்(பீன்ஸ்) - 125 கிராம்
கேரட் - 125 கிராம்
வினிகர் - 3 கப்
செத்தல் மிளகாய் - 5
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
உள்ளி - 5 பல்
இஞ்சி - 2 இன்ச் நீளத்துண்டு ஒன்று
உப்புத்தூள் - தேவையான அளவிற்கு
மிளகுத்தூள் - தேவையான அளவிற்கு
பெருங்காயம் - ஒரு துண்டு
செய்முறை:
கிரைண்டரில் செத்தல்மிளகாய், கடுகு ஆகியவற்றை ஒரு மேசைக்கரண்டி வினிகர் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.
அரைத்த பின்பு அதனுடன் உப்பு, உள்ளி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுது போல அரைக்கவும்.
வெங்காயத்தை தோலுரித்து துப்பிரவாக்கி கழுவி துடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
போஞ்சிக்காயை(பீன்ஸ்)துப்பிரவாக்கி கழுவி துடைத்து நீளவாக்கில் வெட்டி பின்பு (2"-3") துண்டுகளாக குறுக்காக வெட்டி ஒருபாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் பப்பாசிக்காயின் தோலை சீவி கழுவி சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் பச்சைமிளகாயின் காம்பை அகற்றி விட்டு அதனை கழுவி நீளவாக்கில் அதன் ஒரு பக்கத்தில் கீறி அதன் உள்ளிருக்கும் விதைகளை அகற்றி வைக்கவும்.
பின்பு அடுப்பில் மண்சட்டியை வைத்து அதில் அரை கப் வினிகரை ஊற்றி அதனுடன் விதை நீக்கிய பச்சை மிளகாயை போட்டு அவிய விடவும்.
பச்சைமிளகாய் அவிந்து வினிகர் வற்றியதும் அதிலிருக்கும் பச்சைமிளகாயை வேறு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
பின்பு அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி வெங்காயத்தை போட்டு அவித்து வினிகர்வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி கேரட்டை போட்டு அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
பின்பு அதே சட்டியில் அரைகப் வினிகரை ஊற்றி பப்பாசிக்காயை போட்டு அவித்து வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
அதன் பின்பு மிகுதியுள்ள வினிகரை சட்டியில் விட்டு அதனுள் அரைத்தவற்றை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
கொதித்த பின்பு அதில் பெருங்காயம், அவித்த பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கிய பின்பு அவித்த பப்பாசிக்காயையை போட்டு நன்றாக கலக்கவும்.
பின்பு அவித்த கேரட்டை போட்டு நன்றாக கலக்கிய பின்பு அவித்த வெங்காயத்தை போட்டு நன்றாக கலக்கவும்.
பின்பு அவித்த போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு நன்றாக கலக்கிய பின்பு அதனுடன் உப்புத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
அதன் பின்பு மண்சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி அதை ஆற விடவும்.
அச்சாறு ஆறிய பின்பு கண்ணாடி போத்தலில் போட்டு மூடி வைக்கவும்.
அதன் பின்பு அச்சாறு தயராகிவிடும் அதை தேவையான நேரங்களில் எடுத்து பரிமாறலாம்.
குறிப்புகள்:
உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்கள் சாதத்திற்கும் தயிர் சாதத்திற்கும் சப்பாத்திக்கும் அச்சாறு சாப்பிடுவார்கள், கேரட், பப்பாசிக்காய், போஞ்சிக்காய் ஆகிய காய்களில் அச்சாறு தயாரிக்கப்படுகின்றன. அச்சாறு கார்போஹைட்ரேட், கொழுப்பு, கேரட்டின், புரதம், இரும்பு, உயிர்சத்து (A,B1,B2,B3,B6,C,D) பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம்,சோடியம், கால்சியம் ஆகியவை நிறைந்த ஒர் உணவு பொருள். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - அச்சாறை நீண்ட காலத்திற்கு வைத்து பயன்படுத்தலாம். ஈரக்கரண்டியை அச்சாறு போத்தலினுள் போட்டு அச்சாறினை எடுத்தால் அது பழுதடைந்து விடும். மாற்று முறை - மரக்கறிவகைகளை நீராவியில் அவித்தெடுத்து பின்பு அரை கப் வினிகர் விட்டு கரைத்த கூட்டில் இட்டு அவித்து கொள்ளலாம். எச்சரிக்கை- பப்பாசிக்காய் அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.