ஃபீஜோவா ரெலிஷ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஃபீஜோவா (Feijoa) - 500 கிராம் ஆப்பிள் - 2 வெங்காயம் - 2 மால்ட் வினிகர் (Malt Vinegar) - ஒரு கோப்பை (250 மில்லி) பழுப்பு சர்க்கரை (Brown Sugar) - 2 கோப்பை மிக்ஸ்ட் ஸ்பைஸ் - ஒரு மேசைக்கரண்டி கறுவாத்தூள் - ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய்ப்பொடி - அரை தேக்கரண்டி உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஃபீஜோவாவின் தோலைச் சீவிவிட்டு உட்பகுதியை சிறிதாக வெட்டி வைக்கவும்.

ஆப்பிளின் தோலைச் சீவி நடுத்துண்டை நீக்கிவிட்டு மீதியை சிறிய துண்டுகளாக்கவும். இதேபோல் வெங்காயத்தையும் சிறிதாக வெட்டி வைக்கவும்.

ஒரு அடிகனத்த பாத்திரத்தில் இவையனைத்துடனும் மால்ட் வினிகரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும் நெருப்பைக் குறைத்து மெல்லிய தீயில் பாத்திரத்தை மூடி வைத்து வேகவிடவும். அடிப்பிடித்து விடாமல் ஒரு மரக்கரண்டியால் இடைக்கிடை கிளறிவிடவும்.

அரை மணி நேரம் கழித்து மீதிப்பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மீண்டும் கொதிநிலைக்குக் கொண்டுவரவும்.

கலக்கிக் கொண்டே ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். ரெலிஷ் அதிகம் நீர்த்தது போல் இருக்கக்கூடாது.

அடுப்பை அணைத்ததும் உடனடியாக பாட்டிலினுள் மேலே அரை சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு ரெலிஷை நிரப்பவும்.

நிரப்பியபின் பாப் சீல் (Pop Seal) மூடியை வைத்து அழுதியபடியே திருகி இறுக்கி மூடிவிடவும்.

சூடு ஆறும் பொழுது பாட்டில் தானாக சீல் ஆகி இருக்கும்.

பின்பு அழகாக மூடியைச் சுற்றி துணி கட்டிவிட்டு லேபிள் ஒட்டிவிடலாம். ஏனைய ரெலிஷ்கள் போல இதையும் சான்விச்சுகளில் சேர்க்கலாம். க்ராக்கர்ஸோடு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: