பருப்பு சாதம்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 2

பெரிய வெங்காயம் - 4

பச்சை மிளகாய் - 5

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி

புதினா - 2 மேசைக்கரண்டி

பயத்தம் பருப்பு - ஒன்றரை கப்

பிரியாணி அரிசி - 2 கப்

தேங்காய் - ஒன்றரை கப்

நெய் - ஒரு மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகு தூள் - அரை தேக்கரண்டி

சோம்பு தூள் - அரை தேக்கரண்டி

சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - ஒன்றரை தேக்கரண்டி

எண்ணெய் - கால் கப்

செய்முறை:

தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புதினா, கறிவேப்பிலை இரண்டையும் ஆய்ந்துக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையை நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

துருவின தேங்காயுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பிழிந்து கெட்டியான முதல் பால் எடுத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த தேங்காய் சக்கையில் மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து இரண்டாம் தண்ணீர் பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் இருக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும். வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

வதங்கியதும் நறுக்கின புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின்பு அதனுடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள், சோம்பு தூள், சீரகத் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு தேங்காய் பால், உப்பு சேர்த்து கலக்கி விட்டு 2 நிமிடம் கழித்து அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி களைந்து குக்கர் பாத்திரத்தில் போடவும்.

அடுப்பின் தீயை மிதமாக வைத்து 5 நிமிடம் லேசாக கொதிக்க விடவும். இடையில் கிளறிக் கொண்டே இருக்கவும்.

சுமார் 5 நிமிடம் கழித்து எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் பாத்திரத்தை வைத்து மூடி வைத்து வேகவிடவும்.

சுமார் 30 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து பாத்திரத்தை எடுக்கவும். சாதத்தின் மீது சிறிது நெய் ஊற்றி கிளறி விடவும்.

இப்போது ருசியான பருப்பு சாதம் தயார்.

குறிப்புகள்:

இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கப்படும் மதிய உணவு இது. இதனுடன் ஆனியன் ரைத்தா அல்லது கோழி குழம்பு சேர்த்து சாப்பிடலாம்.