சிக்கன் ரைஸ்
தேவையான பொருட்கள்:
கோழி - ஒரு கிலோ
கோழி சூப் கட்டி - 2 (மேகி சிக்கன் க்யூப் அல்லது வேறு )
அரிசி - அரை படி
இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
சிக்கனை தோல் நீக்கி சுத்தம் செய்து கழுவி வைக்கவும். இஞ்சி பூண்டை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு 1 1/4 படி தண்ணீர் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது, சிக்கன் க்யூப், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
சிக்கன் முக்கால் பதமாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும். கோழியை தண்ணீரிலிருந்து எடுத்து விட்டு அந்த நீரை ஆற விடவும்.
அரிசியை களைந்து அதில் ஒரு படி அளவிற்கு ஆற வைத்த சிக்கன் தண்ணீரை ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து ரைஸ் குக்கர் அல்லது அவரவர் முறைப்படி அரிசியை வேக வைத்து எடுக்கவும். (பிரியாணி செய்வது போல தம்மிலும் போடலாம்).
சுவையான சிக்கன் ரைஸ் ரெடி. விருப்பமான சிக்கன் குருமா, வறுவல், ரைத்தாவுடன் பரிமாறவும்.
குறிப்புகள்:
அவரவர் பயன்படுத்தும் அரிசிக்கு தகுந்தார் போல் தண்ணீரின் அளவை மாற்றிக் கொள்ளவும். சிக்கன் க்யூப் போடுவதால் உப்பின் அளவையும் கவனித்து போடவும்.
வேக வைத்த சிக்கனை வைத்து குருமாவும் செய்யலாம். தேவையான மசாலாக்கள் போட்டு சிக்கன் ஃப்ரையும் செய்யலாம், குழம்பும் செய்யலாம்..