4 இன் 1 பக்லவா
தேவையான பொருட்கள்:
பைலோ ஷீட் - ஒரு பெட்டி
ஒலிவ் எண்ணெய் - 1 கப்
பிஸ்தா பருப்பு - 1/4 கப்
பாதாம் பருப்பு - 1/2 கப்
வால் நட் - 1/2 கப்
பெக்கான் பருப்பு - 1/2 கப்
சீனி - 1 1/2 கப்
கறுவா (பட்டை) தூள் - 5 சிட்டிகை
எலுமிச்சை / லெமன் சாறு - 1 மேசைக்கரண்டி
ரோஸ் /ஆரஞ்சு எசன்ஸ் - 1 தேக்கரண்டி
நீளமான பேக்கிங் தட்டு - 1
செய்முறை:
முதலில் தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் அவனை 350 Fஇல் முற்சூடு செய்து வைக்கவும்.
பருப்புக்களை இலேசாக வறுத்து தனித்தனியே மிக்ஸியில் coarseஆக அரைத்து பிஸ்தா தவிர ஏனைய பருப்புக்களுடன் தலா 1 1/2 கரண்டி சீனி, ஒரு சிட்டிகை கறுவாத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும். பிஸ்தா பருப்புக்கு தனியே ஒரு சிட்டிகை கறுவாத்தூள் கலக்கவும்.
பேக்கிங் தட்டின் அடியில் எண்ணெய் தடவி அதன் மேல் ஒரு பைலோ ஷீட்டை வைத்து ப்ரஷால் அதன் மேலும் எண்ணெய் தடவி விடவும்.
பின்னர் அதன் மேல் இன்னொரு பைலோ ஷீட்டை வைத்து மீண்டும் எண்ணெய் தடவவும். இவ்வாறு எண்ணெய் தடவி தடவி 8 - 10 ஷீட்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.
பின்னர் படத்தில் காட்டியவாறு 3 மூலைகளிலும் ஒவ்வொரு பருப்பு கலவையிலும் 2 மேசைக்கரண்டி பருப்பை வைக்கவும். நான்காவது மூலையில் அனைத்து பருப்பிலும் 1/2 - 3/4 மேசைக்கரண்டி வைக்கவும். பிஸ்தா பருப்பில் 1 தேக்கரண்டியும் போடவும்.
பிறகு பருப்பு கலவைகளை சமமாக பரப்பி விடவும்.
பின்னர் இதன் மேல் ஒரு பைலோ ஷீட்டை வைத்து மீண்டும் எண்ணெய் தடவவும் இவ்வாறு 3 - 4 பைலோ ஷீட்கள் வைக்கவும். இவ்வாறு பருப்பு & பைலோ ஷீட் என அடுக்கி (பருப்பு முடியும்வரை) 3 - 4 தடவைகள் செய்து மேலே 5 பைலோ ஷீட்களை வைத்து முடிக்கவும். மேலே வைக்கும் பைலோ ஷீட்டிற்கு எண்ணெய் தடவ தேவை இல்லை. விரும்பினால் சிறிது பட்டர் தடவலாம்.
அதன் பிறகு இரண்டு ஓரங்களிலும் வெளி பகுதியில் இருக்கும் மீதமான பைலோ ஷீட்களை வெட்டி அல்லது மடித்து விட்டு ஒரு கூரான கத்தியால் வில்லைகளாக வெட்டவும்.
பின்னர் முற்சூடுப்படுத்திய அவனில் நடுத்தட்டில் வைத்து 35 - 40 நிமிடங்களுக்கு அல்லது மேற்பகுதி பொன்னிறமாகும்வரை பேக் செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் மீதி சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் காய்ச்சவும். சீனி நுரைத்து வந்ததும் அதனுள் எசன்ஸ், கறுவாத்தூள், லெமன் சாறு சேர்த்து கலக்கி அடுப்பை அணைத்து அப்படியே விடவும்.
பின்னர் பேக் செய்த பக்லவாவை எடுத்து அதன் மேல் காய்ச்சிய சீனி சிரப்பை பரவலாக ஊற்றி 2 மணித்தியாலங்களுக்கு குளிர விடவும்.