ரவா பணியாரம் (கச்சாயம்)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவா - 200 கிராம்

வெல்லம் - 100 கிராம்

வாழைப்பழம் - 2

முந்திரி - 10

தேங்காய் துருவல் - அரை மூடி

பால் - 2 மேசைக்கரண்டி

ஏலக்காய் - 3

எண்ணெய் - 2 கப்

செய்முறை:

ரவாவை சல்லடையில் சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடியாக துருவிக் கொள்ளவும் அல்லது தூள் செய்துக் கொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் சலித்த ரவை, துருவிய வெல்லம், தேங்காய் துருவல் ஆகியவற்றை போட்டு அதனுடன் வாழைப்பழத்தை தோலை எடுத்து விட்டு போடவும்.

அதன் பின்னர் அதில் பொடி செய்த ஏலக்காய், பொடியாக நறுக்கிய முந்திரி இரண்டையும் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை கட்டியில்லாமல் நன்கு பிசைந்து விடவும். அது போல வெல்லத்தையும் நன்கு நசுக்கி விட்டு பிசைந்து பாலை ஊற்றி கெட்டியாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதிகம் பால் சேர்த்தால் மாவு கெட்டியாக இல்லாமல் தளர்ந்து விடும். எண்ணெய்யில் போடும் போது பிரிந்து விடும்.

பிசைந்து ஊற வைத்த மாவை எடுத்து ஒரு முறை நன்கு பிசைந்து விட்டு அதிலிருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து வடைப் போல தட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடைப் போல தட்டியதை எண்ணெயில் போட்டு தீயை குறைத்து வைத்து ஒரு நிமிடம் கழித்து பொன்னிறமாக ஆனதும் திருப்பி விடவும்.

திருப்பி விட்டு சிவந்ததும் ஒரு நிமிடம் கழித்து எடுத்து விடவும். ரவா கலந்திருப்பதால் அதிக நேரம் எண்ணெயில் இருந்தால் கருத்து விடும். இதை போல எல்லா மாவையும் வடைப் போல செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

வாழைப்பழம் சேர்த்து செய்வதால் மிருதுவாக இருக்கும்.