ரவா கேசரி (1)
தேவையான பொருட்கள்:
ரவா - 1 1/2 கப்
சீனி - 2 கப்
முந்திரி - 10
ஏலக்காய் - 4
நெய் - 1/4 கப்
கேசரி பவுடர் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, வெறும் வாணலியில் ரவாவை கொட்டி நிறம் அதிகம் மாறாத அளவிற்கு வறுத்துக் கொள்ளவும். வறுபடும் போது வாசனை வர ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டிலேயே லேசாகக் கிளறிவிட்டு எடுத்துவிடவும். மிகவும் வறுபட்டு விட்டால், கேசரி சுவையாக இருக்காது.
முந்திரியை இரண்டாக உடைத்து வைக்கவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கேசரிப் பவுடரை ஒரு தேக்கரண்டி தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதில் ரவாவை கொட்டவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கவும், ரவா கட்டி பிடிக்காமல் இருக்கவும், விடாது கிளறி கொண்டே இருக்கவும். ரவா நன்கு வேகும் வரை கிளறிவிட்டு வேகவிடவும்.
சுமார் 4 நிமிடங்கள் கழித்து, ரவா வெந்தது பார்த்து, பின்னர் சீனியை சேர்த்து கிளறவும்.
சீனி சேர்த்து தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை. சீனி கரைந்து ரவாவுடன் நன்கு சேரும் வரை கிளறிவிட்டு வேகவிடவும்.
பின்னர் கரைத்து வைத்துள்ள கேசரி பவுடர் கரைசலை ஊற்றி, ரவாவுடன் சேர்த்து கிளறிவிடவும்.
முந்திரியை ஒரு மேசைக்கரண்டி நெய்யில் வறுத்து, அதை அப்படியே நெய்யுடன் கேசரியில் ஊற்றவும். மீதமுள்ள நெய்யையும் ஊற்றி சுமார் 5 நிமிடம் ரவா வேகும் வரை கிளறி விட்டு இறக்கி விடவும்.
பொடித்த ஏலக்காயைத் தூவி கிளறிவிட்டு, முந்திரி துண்டங்கள் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
குறிப்புகள்:
அவசரத்திற்கு தயாரிக்கக் கூடிய இனிப்பு இந்த கேசரி. விரைவாக செய்துவிடலாம்.