ரசமலாய் (1)
தேவையான பொருட்கள்:
ரசமலாய் செய்ய:
பால் - 2 கப்
எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி
சர்க்கரை - 1 கப்
ஊற வைக்க:
பால் - 2 கப்
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 5
பிஸ்தா, பாதாம், குங்கும பூ - அலங்கரிக்க
செய்முறை:
முதலில் ரசமலாய் செய்ய கொடுத்துள்ள பாலை காய்ச்சவும். அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
பால் சிறிது கொதிக்க ஆரம்பிக்கும் போது எலுமிச்சை சாறில் சிறிதளவு சுடு தண்ணீர் சேர்த்து பாலில் ஊற்றவும்.
உடனே பால் திரிந்து வரும். கிளறிக் கொண்டே இருந்தால் தண்ணீர் தனியாகவும் பால் தனியாவும் வந்து விடும். உடனே அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.
இப்பொழுது ஒரு வடிகட்டியில் மெல்லிய துணியை போட்டு வடிக்கட்டவும். பிறகு குளிர்ந்த தண்ணீர் கொண்டு கழுவவும். கழுவினால் எலுமிச்சை சுவை முற்றிலும் நீக்க படும். தண்ணீர் முற்றிலும் வடிந்த பின்னர் துணியை எடுத்து பிழிந்து ஒரு மூட்டை போல கட்டி அழுத்தமான பாத்திரம் அல்லது ஏதாவது வெயிட்டை அதன் மேல் வைக்கவும். ஒரு மணி நேரமாவது வைக்க வேண்டும். அப்பொழுது தான் அதில் உள்ள தண்ணீர் எல்லாம் வெளியேறி பனீர் நன்றாக வரும். கையில் சிறிதளவு எடுத்து உருட்டினால் ஒட்டாமல் உருண்டையாக வரும். இது தான் பதம். இது தான் பனீர் செய்யும் முறை.
பிறகு பனீரை கையால் நன்றாக சப்பாத்தி மாவு பிசைவதை போல் பிசையவும். குறைந்தது மூன்று நான்கு நிமிடமாவது பிசைந்தால் தான் ஒட்டாமல் நன்றாக வரும்.
பிசைந்த மாவை ஆறு பாகமாக பிரித்து வைக்கவும். பிறகு ஒவ்வொன்றாக எடுத்து முதலில் சிறிது அழுத்தி பிசைந்து பிறகு இலகுவாக தட்டி வைக்கவும்.
குக்கரில் மூன்று கப் தண்ணீரில் ஒரு கப் சர்க்கரையை கொட்டி அதிக தீயில் வைக்கவும்.
கொதிக்க ஆரம்பிக்கும் போது தட்டி வைத்ததை போட்டு மூடி வைக்கவும். ஸ்டீம் வந்தவுடன் தீயை குறைத்து மிதமான தீயில் ஏழு அல்லது எட்டு நிமிடம் வேக விடவும். வேகும் போது அளவு பெரிதாகும் அதனால் குக்கர் பெரியதாக இருத்தல் அவசியம். பத்து நிமிடம் கழித்து திறந்தெடுத்து சிறிதளவு பிழிந்து விட்டு தனியே வைக்கவும்.
இதற்கிடையில் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற வைக்க என்று கொடுத்துள்ள பாலை ஊற்றி காய்ச்சவும். நடு நடுவே கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அடி பிடித்து விடும். ஒரு சின்ன ஸ்பூன் அல்லது கிண்ணத்தை போட்டு வைத்தால் அடிபிடிக்காது என்று சொல்லுவர்.
பால் கொஞ்சம் சுண்ட ஆரம்பித்ததும் சர்க்கரையை ஏலக்காய் சேர்த்து பொடியாக்கி சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் வடித்து வைத்துள்ள உருண்டைகளை இதில் சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். இறக்கி பொடியாக நறுக்கி வைத்துள்ள பாதாம் பிஸ்தா மற்றும் குங்கும பூ (தேவையெனில்) சேர்க்கவும். குளிர் சாதன பெட்டியில் வைத்து சில்லென்று பரிமாறவும். சுவையான ரசமலாய் தயார்.
குறிப்புகள்:
பாலில் சேர்க்கும் முன்னரே எடுத்து பரிமாறினால் அது தான் ரசகுல்லா. தட்டி போடுவதற்கு பதிலாக உருட்டி போட வேண்டும். ஃப்ரெஷாக பனீர் செய்த பின் செய்யும் ரசமலாய் அல்லது ரசகுல்லா தான் அலாதி சுவையாக இருக்கும்.