பெட்டி பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்

முட்டை - 1 கப்

சீனி - 1 கப்

முந்திரி பருப்பு - 15

பேகிங் பௌடர் - 1/4 தேக்கரண்டி

வனிலா எஸென்ஸ் - 1 தேக்கரண்டி

உப்பு - 1/4 ஸ்பூன்

எண்ணெய் - சுமார் 250 மில்லி

செய்முறை:

தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராய் வைத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

எண்ணெய், முந்திரி பருப்பு தவிர மற்ற அனைத்தையும் மேலே கூறியுள்ள அளவில் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கிக்கொள்ளவும்.

நன்றாக கலக்கி சீனி முழுவதும் கரைந்து கூழ் பதத்திற்கு வந்தவுடன், உடைத்த முந்திரி பருப்பு சேர்க்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானவுடன் மிக குறைந்த அளவு தீயில் வைத்து, சிறிது எண்ணெய் விட்டு, ஒரு கரண்டி மாவை எடுத்து நீள் சதுரவாக்கில் ஊற்றவும்.

திருப்பிப்போடும்போது முறுகும் அளவுக்கு அதன் மேல் எண்ணெய்விடவும்.

இப்போது மாவின் ஓரங்களை ஒரு தோசை திருப்பியால் சரிசெய்யவும்.

சீனி கலந்திருப்பதால் இது சீக்கிரம் முறுகிவிடும். அதனால் பொன்முறுகலானவுடனேயே திருப்பிப்போடவும்.

திருப்பி போட்ட பிறகு அதன் மேலேயே மீண்டும் மாவை ஊற்றவும். இந்த முறையில் ஊற்றும்போது ஓரங்களில் மாவு வழிந்தோடாத அளவு கம்மியாக ஊற்றவேண்டும். ஒவ்வொரு முறை மாவு ஊற்றும்போதும் முதலில் சொன்னதுபோல் மேலே எண்ணெய்விட்டு, ஓரங்களில் உள்ள மாவை சரிபண்ணி, தீயவிடாமல் பொன்முறுகலாக இருக்கும்போதே புரட்டி போடவேண்டும்.

இப்படியே மாவு முழுவதையும் ஊற்றினால் ஒரு சுமார் 5 அல்லது 6 இன்ச் அளவு உயரம் கிடைக்கும். (ஆனால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவுக்கு மேல் அதிகமாக அளவை கூட்டி செய்வதாக இருந்தால் ஒரே தடவையில் எல்லா மாவையும் ஊற்றக்கூடாது. எத்தனை பங்கு அதிகப்படுத்துகிறோமோ அத்தனை பணியாரங்களாக ஊற்றலாம். இதில் கூறியுள்ள அளவு ஒரு பணியாரத்திற்கு உள்ளது.)

பிறகு அதன் நான்கு பக்கங்களையும் பொன்முறுகலாக முறுகவைக்கவேண்டும்.

சற்று ஆறியவுடன் நாம் விரும்பும் வடிவங்களில் வெட்டி பரிமாறலாம்.

குறிப்புகள்: