பால் கொழுக்கட்டை (7)
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப் (அரிசியை களைந்து, துணியில் காய வைத்து, அரிசி உலர்ந்த பின் அரைக்கவும். அல்லது கடையில் கிடைக்கும் அரிசி மாவை கூட உபயோகிக்கலாம்)
வெல்லம் - 1 1/4 கப் (பொடித்தது)
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் - 4
முந்திரி பருப்பு - 10
பால் - ஒரு கப்
செய்முறை:
தேங்காயை சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காயை ஒரு பாத்திரத்தில் நன்கு பிழிந்து தேங்காய் பால் எடுக்கவும். இதை முதல் தேங்காய் பாலாக வைத்துக் கொள்ளவும்.
அதில் கிடைக்கும் தேங்காய் சக்கையை மறுபடியும் மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்து இரண்டாம் தேங்காய் பால் எடுக்கவும். இதே முறையில் மூன்றாம் பாலையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறவும்.
நன்றாக மாவு வெந்து சுருள வந்த பின் அடுப்பை அணைக்கவும். மாவு ஆறிய பின்பு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
ஒரு கடாயில், மூன்றாம் பாலை ஊற்றி கொதிக்க விடவும். கொதித்த பின், கொஞ்சம் அரிசி உருண்டைகளை போடவும். சிறு கொதி வந்த பின், இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றி சிறிது கொதித்த பின், இன்னும் சில உருண்டைகளை போட்டு கொதிக்க விடவும்.
பின் மீதி இருந்த உருண்டைகளையும் போட்டு, பொடித்த வெல்லத்தையும் போட்டு, இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு, இறுதியில் முதல் தேங்காய் பாலை ஊற்றி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி பருப்பு, ஒரு கப் பால் (வேண்டுமானால் பாலை நன்கு சுண்ட காய்ச்சி ஊற்றலாம்) ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.