பால் கொழுக்கட்டை (1)
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கிலோ
உருண்டை வெல்லம் - 3/4 கிலோ
தேங்காய் துருவல் - 1 கப் + 1/4 கப்
ஏலக்காய் - 5
கடலை பருப்பு - 1/4 கிலோ
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை:
குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஏலக்காய் மற்றும் வெல்லத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 10 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் கடலைப்பருப்பை போட்டு 20 நிமிடம் வேக வைக்கவும்.
கடலைப்பருப்பு வேகும் நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அதில் கல் உப்பை போட்டு கரைக்கவும். உப்பு கலந்த தண்ணீரை இளம் சூடான பதம் வரும் வரை சூடுப்படுத்தவும்.
ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அதில் இளம் சூடான தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து விட்டு பிசையவும்.
மாவு கையில் ஒட்டாமல் இடியாப்பத்திற்கு பிசைவது போல் பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு பிசைந்த மாவை ஒரு சிறிய கோலி குண்டு அளவு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து வலது கையின் விரல்களால் நீளவாக்கில் உருட்டவும். இதைப் போல் எல்லாமாவையும் உருட்டி ஒரு வெள்ளை துணியில் போட்டு 10 நிமிடம் உலர விடவும்.
கடலைப்பருப்பு வெந்ததும் அதில் உருட்டி வைத்திருக்கும் மாவை மூன்று பாகங்களாக பிரித்து வைத்துக் கொண்டு முதல் பாதியை போட்டு ஒரு முறை கரண்டியால் கிளறி விடவும். பிறகு 3 நிமிடம் கழித்து அடுத்த பாதியை போட்டு கிளறி விடவும். மீண்டும் 3 நிமிடம் கழித்து மூன்றாவது பாதியை போட்டு கிளறி விடவும்.
10 நிமிடம் கழித்து அந்த உருண்டைகள் வெந்ததும் வெல்லத்தை போட்டு கிளறி விடவும். வேகமாக கிளறாமல் நிதானமாக கிளறி விடவும்.
வெல்லம் கரைந்ததும் ஏலக்காய் தூளை போடவும். அதன் பின்னர் தேங்காய் துருவலை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.