பச்சைப்பயறு உருண்டை
தேவையான பொருட்கள்:
பச்சைபயறு மாவு - 1 கப்
அரைத்த சீனி - 1 கப்
நெய் - 1 மேசைக்கரண்டி
டால்டா - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி - 3/4 தேக்கரண்டி
முந்திரி - 6
செய்முறை:
கால் கிலோ பச்சைபயற்றை வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு மெஷினில் கொடித்து அரைத்துக் கொள்ளவும். அதே போல் கால் கிலோ சீனியையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சைபயறு மாவு, பொடி செய்த சீனி ஆகியவற்றை கொட்டி நன்கு கலந்துக் கொள்ளவும். அதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.
வேறொரு பாத்திரத்தில் நெய், டால்டா இரண்டையும் போட்டு உருக்கிக் கொள்ளவும்.
நெய்யில் முந்திரியை முழுதாக போட்டு வறுத்து எடுத்து சிறிது சிறிதாக உடைத்து மாவில் போடவும்.
கிளறி வைத்திருக்கும் மாவுடன் உருக்கிய நெய்யை ஊற்றி நன்கு ஒன்று சேரும்படி கிளறவும்.
ஒரு ஸ்பூன் கொண்டு கிளறலாம். மாவு சற்று உதிரியாகத்தான் இருக்கவேண்டும்.
கிளறிய மாவை நெய்யின் ஈரப்பதம் போவதற்குள் உருண்டைப் பிடிக்க வேண்டும். பெரிய நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து இரண்டு கைகளாலும் மிருதுவாக அழுத்தி பிடிக்கவும்.
அதிகம் அழுத்தினால் உடைந்து விடும். பதமாக பிடிக்கவும். இரண்டு கைகளின் உள்ளங்கைகளை கொண்டு, அழுத்தி உருண்டை பிடிக்கவும்.
உங்கள் கை கொள்ளும் அளவிற்கு மாவு எடுத்து, தேவையான அளவில் உருண்டைகள் பிடிக்கலாம்.
குறிப்புகள்:
பச்சைப்பயறு உருண்டைக்கான மாவு தனியாக கடைகளில் கிடைக்கின்றது. அதை வாங்கி வெறும் நெய் மட்டும் உருக்கி ஊற்றி செய்தால் போதுமானது.