சுசியம் (1)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
கடலை பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 100 கிராம் (பொடித்து கொள்ளவும்)
ஏலக்காய் - 3 (விரும்பினால்)
தேங்காய் துருவல் - 1/2 கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பஜ்ஜி மாவை விட கொஞ்சம் கட்டியாக இருக்க வேண்டும். கடலை பருப்பை குழைய வேக வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலைபருப்பு, வெல்லம், தேங்காய் துருவல் மூன்றையும் போட்டு பிசையவும்.
வேண்டுமெனில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பின்பு இதனை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
இந்த உருண்டையை அரைத்து வைத்துள்ள மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இதில் கடலை பருப்பிற்கு பதிலாக பாசிபயறு அல்லது தட்டாம் பயறு கூட பயன்படுத்தலாம் அவரவர் விருப்பத்தை பொருத்தது.
இதை பெரும்பாலோர் மைதா மாவில் முக்கி பொரித்து எடுப்பார்கள் அதை விட இது சுவையானது சத்தானது ஏனெனில் மைதா உடம்பிற்கு கேடு என்பது அறிந்ததே.
அரிசி, உளுந்து அளவு நீங்கள் இட்லி மாவிற்கு எவ்வளவு அரிசிக்கு எவ்வளவு உளுந்து போடுவீர்களோ அந்த அளவே போதும் நான் மிக்ஸியில் அரைத்ததால் ஒரு கப்பிற்கு அரை கப் உளுந்து போட்டுள்ளேன்.
மேலும் மேல் மாவில் உப்பு சேர்க்கவில்லை உப்பு சேர்க்காமல் செய்யும் சுவை பிடிக்காதவர்கள் உப்பு சேர்த்து செய்யவும்.
மேல் மாவு மீதம் ஆனாலும் கவலை வேண்டாம் அதில் வெங்காயம், பச்சை மிளாகாய் நறுக்கி போட்டு சீரகம், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் ஒரே நேரத்தில் 2 வகை வடை ரெடி.