சிறு பயறு பாயசம்
தேவையான பொருட்கள்:
சிறு பயறு (பாசிப்பருப்பு) - 1/2 கப்
வெல்லம் - 50 கிராம்
கெட்டித் தேங்காய் பால் - 3/4 கப் + இரண்டாம் பால் 1 1/2 கப்
தேங்காய் (சிறு பற்களாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 3
முந்திரி, கிஸ்மிஸ் - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் அரை தேக்கரண்டி நெய் ஊற்றி சிறு பயறை சிவக்க வறுக்கவும்.
வறுத்த பயறை தண்ணீரில் களைந்து ஒரு கப் இரண்டாம் பால் கலந்து குக்கரில் வைத்து மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய வெல்லத்துடன் வேக வைத்த பயறு, ஒரு மேசைக்கரண்டி நெய், மீதமுள்ள இரண்டாம் பால் சேர்த்து கிளறவும்.
மிதமான தீயில் வைத்து ஓரளவு கெட்டியாகும் வரை இடையிடையே கிளறிக் கொண்டிருக்கவும்.
பொடித்த ஏலக்காய், கெட்டித் தேங்காய் பால் சேர்த்து கிளறி, ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.
மீதமுள்ள நெய்யில் நறுக்கி வைத்துள்ள தேங்காயை சிவக்க வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். முந்திரி மற்றும் கிஸ்மிஸையும் அதே நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்த்து கிளறவும்.
குறிப்புகள்:
இந்த பாயசத்திற்கு சுவை கூட்டுவதே நெய்யில் வறுத்த தேங்காய் பற்கள்தான்.
இலையில் ஊற்றினால் தண்ணீராக ஓடவும் கூடாது. பொங்கல் போல கெட்டியாகவும் இருக்கக் கூடாது. சரியான பதத்தில் இருக்க வேண்டியது அவசியம்.
பாயசம் ஆறும் போது சற்று கெட்டியாகும். அதிகம் கெட்டியாகி விட்டால் காய்ச்சிய பால் சேர்த்துக் கொள்ளலாம்.