குலோப் ஜாமூன்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 3/4 கப்
சீனி - 1 கப்
ஏலக்காய் - 3
பால் - 1/4 லிட்டர்
கலர் பவுடர் - 1/4 தேக்கரண்டி
டால்டா - 2 மேசைக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
நல்ல சுத்தமான, தண்ணீர் கலப்பில்லாத பாலாக வாங்கிக் கொள்ளவும். இதரப் பொருட்களை தயாராய் வைத்துக் கொள்ளவும். மைதாவுடன் சோடா உப்பு சேர்த்து, சலித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். அடிபிடிக்காவண்ணம் தொடர்ந்து கிளறிவிட்டபடி இருக்கவும். ஒரங்களிலும் பால் படியாதபடி வழித்துவிட்டு கிளறவும்.
கால் லிட்டர் பால் நன்கு சுண்டி வரும் பொழுது அதில் மைதா மாவை போட்டு கட்டி விழாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கி வைத்து மிருதுவான பதம் வரும் வரை டால்டாவை சேர்த்து கைகளால் பிசையவும்.
மாவு நன்கு மிருதுவாக இருக்கவேண்டும். கட்டிகளாக இருக்கக்கூடாது. மாவை அடித்துப் பிசையக் கூடாது.
பிசைந்த மாவினை சிறிது சிறிதாக கிள்ளி, ஒரே அளவிலான சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு கலர் பவுடர் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். அதில் ஏலக்காயை தூள் செய்து போடவும்.
வாணலியில் எண்ணெய் ஒன்றரை கப் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
உருண்டைகள் பொன்னிறமாக சிவந்ததும் எடுத்து, சீனிப் பாகில் போட்டு ஊறவிடவும்.
இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு எடுத்து சாப்பிட்டால் மிருதுவாக இருக்கும்.