கிழங்கு போளி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு (மசித்தது) - 1/2 அல்லது 3/4 கப்

மைதா மாவு - 1/2 கப்

கோதுமை மாவு - 1/2 கப்

மஞ்சள் தூள் (விரும்பினால்) - ஒரு சிட்டிகை

நெய் - 4 தேக்கரண்டி

துருவிய வெல்லம் - 1/2 கப்

பொடித்த ஏலக்காய் - 2

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

செய்முறை:

கிழங்கை ஆவியில் வேக வைத்து தோல் நீக்கி மசிக்கவும்.

கோதுமை மாவு, மைதா மாவு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொண்டு நெய் மற்றும் தேவையான நீர் விட்டு சப்பாத்தி மாவை விட சற்று தளர்வாக பிசைந்து 4 மணி நேரம் மூடி வைக்கவும்.

பூரணம் செய்வதற்கு பொடித்த ஏலக்காய், மசித்த கிழங்கு மற்றும் துருவிய வெல்லம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். (இதை மிக்ஸியில் ஒரு சுற்று அரைத்தும் எடுக்கலாம்). இனிப்பை சரி பார்க்கவும். விருப்பத்திற்கேற்ப வெல்லம் குறைவாகவோ, கூடுதலாகவோ சேர்க்கலாம்.

வாழை இலை (அ) ஒரு கவர் மேல் எண்ணெய் தடவி பிசைந்து வைத்த மாவில் ஒரு உருண்டை எடுத்து கையால் தட்டவும். இதன் நடுவே ஒரு உருண்டை பூரணம் வைத்து மூடி விடவும்.

இந்த உருண்டையை மெல்லியதாக திரட்டி, சூடான தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் வேக விட்டு எடுத்து பரிமாறவும். விரும்பினால் நெய் தேய்க்கலாம்.

குறிப்புகள்:

வெறும் மைதாவை விட கோதுமை பாதியும், மைதா பாதியும் சேர்க்கும் போது மாவு மூடி தேய்க்க வரும், அதே போல் ஜவ்வு போன்ற தன்மையின்றி மென்மையாக இருக்கும்.

இது போல் செய்யும் போது கடைகளில் கிடைக்கும் போளி போல் மெல்லியதாக திரட்ட முடியும். நெய்யும் அதிகம் தேவைப்படாது.

மாவில் எண்ணெயை விட நெய் சேர்த்து பிசைவதாலும், நீண்ட நேரம் ஊற வைத்து செய்வதாலும் மென்மையான போளி கிடைக்கும்.

பூரண கலவையை ஒரு முறை மிக்ஸியில் லேசாக சுற்றி எடுத்தால் ஒன்று போல் மசிந்து வரும், திரட்டும் போது தடுக்காது.