கிட்ஸ் பால் பூரி

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பால் - 1 கப்

கண்டன்ஸ்டு மில்க் - 1/4 கப்

சர்க்கரை - 4 தேக்கரண்டி

பாதாம் - 8

ஏலக்காய் தூள் (விரும்பினால்) - சிறிது

குங்குமப்பூ - சிறிது

நெய் - 1 தேக்கரண்டி

மைதா - 3/4 கப்

ரவை - 1 தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

பாதாம், பிஸ்தா, முந்திரி - சிறிது (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் / நெய் - பொரிக்க

செய்முறை:

பாதாமை வெது வெதுப்பான நீரில் ஒரு மணி நேரம் அல்லது குளிர்ந்த நீரில் இரவு முழுக்க ஊற வைத்து தோல் நீக்கவும்.

ஊறிய பாதாமை பால் அல்லது நீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.

பாலை காய்ச்சி சிறிது பாலை தனியாக எடுத்து குங்குமப்பூ போட்டு வைக்கவும்.

மீதம் பாலில் அரைத்த பாதாம் விழுது, கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பில் இருந்து எடுத்து குங்குமப்பூ கலந்த பால், ஏலக்காய் தூள் கலந்து வைக்கவும்.

மைதாவுடன், சிட்டிகை உப்பு, ரவை, நெய் கலந்து தேவையான நீர் விட்டு பூரி மாவாக பிசைந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் / நெய் விட்டு காய்ந்ததும் மாவை தேய்த்து சிறு சிறு பூரிகளாக போட்டு எடுக்கவும்.

பூரிக்களை ஒரு தட்டில் வைத்து மேலே சூடான பால் கலவை ஊற்றி பொடியாக நறுக்கிய நட்ஸ் தூவி பரிமாறவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.

குறிப்புகள்:

பெரிய பூரிகளாக போட்டு எடுத்து அதை உடைத்தும் சேர்க்கலாம்.

இதில் கோதுமை மாவில் செய்த பூரியும் பயன்படுத்தலாம். சர்க்கரையின் அளவு உங்கள் விருப்பமே.

பூரி மாவில் உப்பு சேர்க்க கூடாது. இனிப்பை எடுத்து காட்ட ஒரு சிட்டிகை போதுமானது.

கண்டன்ஸ்டு மில்க் இல்லாமல் வெறும் பாலை மட்டுமே திக்காக காய்ச்சியும் பயன்படுத்தலாம்.

பாதாம் அரைத்து சேர்ப்பதால் ஆற ஆற திக்காகும், மீண்டும் சற்று நீர்க்க செய்ய பால் காய்ச்சி சேர்த்து கொள்ளலாம். ஆனால் இதில் பாதாம் அரைத்து சேர்ப்பது தான் சுவையை கூட்டும்.