கச்சான் அல்வா
தேவையான பொருட்கள்:
கச்சான் (வறுத்து சுத்தம் செய்து பாதியாக்கிய) - 250கிராம்
சீனி (சர்க்கரை) - 250 கிராம்
அப்பச்சோடா - 2 சிட்டிகை
பட்டர் - 2 மேசைக்கரண்டி (நிரப்பி)
செய்முறை:
ஒரு தட்டினை எடுத்து அதன் முழுப்பகுதிக்கும் நன்றாக பட்டரை பூசி வைக்கவும்.
பின்பு ஒரு உருளையை (பரோட்டா, ரொட்டி, சப்பாத்தி தட்ட பயன்படுத்துவது) எடுத்து அதன் மேல் முழுப் பகுதிக்கும் பட்டரை நன்றாக பூசிவைக்கவும்.
பட்டரை நன்றாக பூசிய பின்பு அடுப்பில் தாச்சியை (வாணலியை) வைத்து சூடாக்கவும் .
தாச்சியை (வாணலியை) சூடானதும் அதில் சீனி (சர்க்கரையை)போட்டு அதனை கரண்டியால் இடை விடாது வறுத்து கொண்டிருக்கவும்.
சீனி(சர்க்கரை முழுவதும் இளகிபாகாகவரத்தொடங்கியதும் அதனுள் ஒரு மேசைக்கரண்டி பட்டர், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
எல்லாம் நன்றாக கலந்தபின்பு அதனுடன் வறுத்து கோது நீக்கி தோல் உரித்து இரண்டாக உடைத்து வைத்திருக்கும் (இரண்டாக பிளந்த வெள்ளை முத்து) கச்சானை (நிலக்கடலை,வேர்கடலை) கொஞ்சம் கொஞ்சமாக முழுவதையும் துவவும்.
கச்சான் (நிலக்கடலை, வேர்க்கடலை) முழுவதும் தூவி சேர்த்த பின்பு உடனடியாக அடுப்பிலிருந்து இறக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கியதை உடனடியாக பட்டர் பூசிய தட்டில் போட்டு அதனை பட்டர் பூசிய உருளையினால் நன்கு அழுத்தி பரப்பவும்.
அழுத்தி பரப்பியவுடன் உடனடியாக ஒரு கூரான கத்தியால் 1" தர 1" அளவான துண்டுகளாக அதன் மேல் நன்றாகவும் ஆழமாகவும் கீறவும்.
அதன் பின்பு அதனை நன்றாக ஆறவிடவும்.
நன்றாக ஆறிய பின்பு சுவையான சத்தான கச்சான் (நிலக்கடலை,வேர்கடலை)அல்வா தயாராகிவிடும்.
தயாரான கச்சான் (நிலக்கடலை,வேர்கடலை) அல்வா துண்டுகளை பிரித்தெடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
கச்சான் => நிலக்கடலை அல்லது வேர்கடலை