இனிப்பு போளி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/2 கிலோ

கடலை பருப்பு - 1/2 கிலோ

தேங்காய் - 1

வெல்லம் - 1/2 கிலோ

ஏலக்காய் - 5

உப்பு - 1/4 தேக்கரண்டி

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

தேங்காயை துருவிக் கொள்ளவும். வெல்லத்தை நசுக்கி பொடி செய்துக் கொள்ளவும். ஏலக்காயையும் பொடி செய்துக் கொள்ளவும். மைதா மாவை சலித்து எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் எடுத்து தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும்.

அடிகனமான ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவலை போட்டு, கருக விடாமல் நன்கு வாசனை வரும் வரை, சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதில் பொடி செய்து வைத்திருக்கும் வெல்லத்தை போடவும்.

அதில் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை நன்கு கைவிடாமல் (4 நிமிடம்) கிளறவும்.

4 நிமிடம் கழித்து வெல்லம் கரைந்து நுரைத்து வரும் போது வேக வைத்து, தண்ணீரை வடித்து வைத்திருக்கும் கடலைப் பருப்பை போடவும்.

மேலும் ஒரு நிமிடம் கிளறிவிட்டு, கடலைப் பருப்புடன் வெல்லப் பாகு ஒன்றாக சேர்த்ததும் இறக்கி வைத்து விடவும். பிறகு கிரைண்டரில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும்.

போளிக்கான மாவை முன்பாகவே தயாரித்து வைத்துவிட வேண்டும். மைதா மாவுடன் உப்பு, சோடா உப்பு, ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்கு அடித்து பிசையவும். மீண்டும் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிருதுவாக பிசையவும். பிசைந்த மாவை 6 மணிநேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும் மாவின் பதம் இழுத்தால் ரப்பர் போல் வரவேண்டும். பிறகு பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து, ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி, அதன் மீது வைத்து அப்பளம் போல தட்டிக் கொள்ளவும். தட்டிய மாவின் மத்தியில் எலுமிச்சை அளவு பருப்பு பூரணத்தை வைக்கவும்.

பிறகு அப்பளமாக தட்டிய மைதா மாவின் நான்கு ஓரங்களை எடுத்து பூரணம் மறையும்படி மூடி விடவும். இதே போல் அனைத்து மாவையும், பூரணத்தை வைத்து தயார் செய்துக் கொள்ளவும்.

பிறகு மூடிய பக்கத்தை அடியில் வைத்து மெல்லிய வட்டமாக தட்டவும். அனுபவம் உள்ளவர்கள் கையினாலே வட்டமாக தட்டி விடுவார்கள். இல்லையென்றால் அப்பள் குளவியை வைத்து மிகவும் எச்சரிக்கையாக, மெதுவாக தேய்க்கலாம். மாவின் அளவு பூரணத்தின் அளவை விட சற்று அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி தட்டி வைத்திருக்கும் போளியை இலையுடன் போட்டு இலையை மெதுவாக எடுக்கவும். மேலே எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.

போளி இலேசாக சிவந்தவுடன் எடுத்துவிடவும். கருகிவிடக்கூடாது.

குறிப்புகள்: