அரவணை (நெய் பாயசம்)
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
வெல்லம் - 6 கப்
நெய் - ஒரு கப்
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 20 கிராம்
தேங்காய் - அரை மூடி
செய்முறை:
ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
தேங்காயை சிறு சிறு துண்டுகளாய் கீறி, வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை தனியாக பாகு காய்ச்ச வேண்டும். சிறிது கெட்டியாக பாகு காய்ந்ததும் அதை வெந்து கொண்டிருக்கும் அரிசியில் விடவும். பாகாக காய்த்து ஊற்றாமல், வெல்லத்தை பொடி செய்தும் வெந்து கொண்டிருக்கும் அரிசியில் போடலாம்.
நெய்யை லேசாக சூடாக்கி சிறிது சிறிதாக வெந்து கொண்டிருக்கும் அரிசியில் விட்டு கிளறிக் கொண்டேயிருக்கவும்.
அரிசி, வெல்லம், நெய் ஆகிய மூன்றும் ஒன்றாக சேர்ந்து கெட்டியாக வரும்வரை கிளற வேண்டும்.
அடுப்பில் இருந்து இறக்கிய பின், நெய்யில் திராட்சை, முந்திரியை வறுத்துப் போடவும்.
வறுத்த தேங்காய் கீறல், ஏலப்பொடியைத் தூவி பரிமாறவும்.