அதிரசம் (1)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கோப்பை
வெல்லம் - 2 கோப்பை
கசகசா - 1 தேக்கரண்டி
பொடித்த ஏலக்காய் - 4
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை குறைந்தது ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்து ஒரு கெட்டியான துணியில் கொட்டி உலர்த்தவும்.
அரிசி முழுவதும் காயவிடவேண்டாம் சற்று ஈரமாயிருக்கும்போதே மிக்ஸியில் மையாக பொடித்து பலமுறை ஜல்லடையில் சலித்து, அதில் கசகசா மற்றும் பொடித்த ஏலக்காயையும் சேர்த்து கலக்கி வைக்கவும்.
பிறகு வெல்லத்தில் அரைக்கோப்பை நீரைச் சேர்த்து அடுப்பில் வைத்து கரையவிடவும்.
பின்பு அதை அடிகனமான பாத்திரத்தில் வடிகட்டி அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
பாகு கெட்டி பாகு பதத்தில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மாவை சிறிது சிறிதாக கொட்டி கிளறவும்.
அனைத்து மாவையும் கிளறிய பின்பு நன்கு ஆறவைத்து மூடி, இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
அடுத்த நாளன்று இறுகி இருக்கும் பாகை கைகளால் நன்கு பிசையவும், கை சூட்டிலேயே மாவுக் கலவை இளகிவிடும்.
அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து வடையை விட சற்று மெல்லியதாகத் தட்டி சூடான எண்ணெயில் போடவும்.
அடுப்பை நிதானமாக எரியவிட்டு அதிரசங்களை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
குறிப்புகள்:
அதிரசம் சூடாக இருக்கும்போது கெட்டியாக இருக்கும் நன்கு ஆறியபின் பதமாக சாப்டாகிவிடும்.