மட்டன் பெப்பர் ஃப்ரை (1)
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
தேங்காய் பால் - 1 மேசைக்கரண்டி
தாளித்து வதக்க:
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - 2 கொத்து
சன்னமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - பாதி
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பொடி வகைகள்:
இடித்த மிளகுப் பொடி - 2 மேசைக்கரண்டி
மல்லிப் பொடி - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
இடித்த சோம்பு பொடி - 1 தேக்கரண்டி
அரைத்து மேரினேட் செய்ய:
இஞ்சி, பூண்டு - தலா 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - கைப்பிடியளவு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
புதினா இலை - சிறிது
செய்முறை:
முதலில் அரைக்க கொடுத்தவற்றை நன்கு விழுதாக அரைத்து மட்டனில் கலந்து ஊற வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து குக்கரில் மட்டனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேகும் வரை விசில் வரவிட்டு இறக்கவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு பின் வெங்காயம் சேர்த்து சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின் மிளகுப் பொடி தவிர மற்ற பொடி வகைகளை சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி, வேக வைத்த மட்டனையும், அதன் ஸ்டாக்கையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து சிறிது வற்றும் வரை விடவும்.
தண்ணீர் வற்றியதும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறி மிளகுப் பொடியை தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
மட்டனை குக்கரில் வைக்காமல் கடாயிலேயே நன்கு வேகவிட்டு ட்ரையாக மாறும் வரை சமைப்பார்கள். சீக்கிரம் ஆக குக்கரில் வைத்துக் கொள்ளலாம். குக்கரில் இருந்து கடாய்க்கு மாற்றாமல், வெங்காயம் தக்காளியை குக்கரிலேயே வதக்கி மட்டனை போட்டு விசில் விட்டு எடுத்து பின் பொடி வகைகளை சேர்த்தும் ட்ரையாகும் வரை வதக்கி எடுக்கலாம்.
தக்காளி மற்றும் தேங்காய் பாலை சேர்க்க மாட்டார்கள். விரும்பினால் சேர்க்காமலும் செய்யலாம்.