ஃப்ரைடு ஸ்பைசி ஸரீமீ
தேவையான பொருட்கள்:
ஸரீமீ (Surimi Crab Meat) - 500 கிராம்
அரிசி மாவு - 1/2 கோப்பை
கோதுமை மாவு - 1/4 கோப்பை
மீன் மசாலா - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி
சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எள்ளு - 2 மேசைக்கரண்டி
கேசரிப் பொடி - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவுடன் கோதுமை மாவு, மீன் மசாலா, மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் கேசரிப் பொடி கலந்து தடிப்பாகக் (திக்காக) கரைக்கவும்.
சீரகத்தை உள்ளங்கையில் வைத்துக் கசக்கி தூவவும். எள்ளையும் தூவிக் கலக்கவும்.
ஸரீமீயை டயமண்ட் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
மாவுக் கரைசலில் ஒரு பிடி அளவு வெட்டிய ஸரீமீ துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வைத்தால் சுவையை உறிஞ்சிக் கொள்ளும்.
பிறகு எண்ணெயைக் காயவிட்டு துண்டுகள் பிரியாமல் எடுத்துப் போட்டு, ஒரு பக்கம் பொரிந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் பொன்னிறமானதும் இறக்கி கிச்சன் பேப்பரில் விட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
எண்ணெய் அதிகம் சூடாகி விடாமல் பார்த்துக் கொள்ளவும். தேவைக்கு மேல் பொரிய விட்டால் வெடிக்கும். எண்ணெயையும் உறிஞ்சிக் கொள்ளும்.
மெல்லிதாக இனிப்பும், காரமும் கலந்து வித்தியாசமான சுவையோடு இருக்கும். இதற்குத் தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை.