மட்டன் குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
மட்டன் - 3/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து
பான்டன் இலை (ரம்பை) - ஒரு துண்டு (விரும்பினால்)
மிளகாய்ப் பொடி - 2 அல்லது 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
கூட்டு மாவுப் பொடி - 2 தேக்கரண்டி
வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
உளுந்து, சீரகம், மிளகு - தலா 1/2 தேக்கரண்டி
கூட்டு மாவுப் பொடிக்கு:
கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு
உளுந்து - ஒரு கைப்பிடி அளவு
புழுங்கல் அரிசி - அரை கைப்பிடி அளவு
சோம்பு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
பட்டை - ஒன்றரை அங்குலத் துண்டு
ஏலம், கிராம்பு - 5
தாளிக்க:
கடுகு, உளுந்து, சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெறும் வாணலியில் கூட்டு மாவுப் பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களில் கடலைப்பருப்பு, உளுந்து மற்றும் அரிசியை சிவக்க வறுத்து ஆறவிடவும்.
பிறகு சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, ஏலம் மற்றும் கிராம்பு ஆகியவற்றைத் தனியாக சிவக்க வறுத்தெடுத்து ஆறவிடவும். ஆறியதும் அத்துடன் வறுத்த கடலைப்பருப்பு, உளுந்து மற்றும் அரிசியைச் சேர்த்து நைசாக பொடித்துக் கொள்ளவும். கூட்டுமாவுப் பொடி தயார்.
வறுத்து அரைக்க வேண்டியவற்றை சிவக்க வறுத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்த மட்டனுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. மட்டனிலுள்ள தண்ணீரே போதுமானது).
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பான்டன் இலை சேர்த்து வதக்கவும்.
சின்ன வெங்காயம் அரை பதமாக வதங்கியதும், நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த மட்டனைச் சேர்த்துக் கிளறவும்.
அனைத்தும் வெந்து, குழம்பு சற்று கெட்டியானதும் கூட்டு மாவுப் பொடி சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற சுவையான மட்டன் குழம்பு தயார்
கூட்டு மாவுப் பொடியை மட்டன், கோழி, முட்டை மற்றும் அனைத்து விதமான குருமாக்களுக்கும் பயன்படுத்தலாம்.