தம் முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
தம் முட்டைக்கு:
முட்டை - 3
சோம்பு + சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
குழம்பிற்கு:
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லிதூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு + சீரகம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 5 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
பச்சை மிளகாய் - 1
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சோம்பு சீரக தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும்.
கிண்ணத்தை இட்லி பானையில் வைத்து மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
முட்டை வெந்தவுடன் (கத்தியால் குத்தி பார்த்து ஒட்டவில்லை என்றால் வெந்துவிட்டது ) வெளியில் எடுத்து வைத்து ஆற வைக்கவும். ஆறிய பின் கத்தியால் நான்காக வெட்டி கத்தியைக் கொண்டு பாத்திரத்தின் ஓரங்கள் வழியாக மெதுவாக எடுக்கவும். கேக் போல் நன்றாக வந்து விடும்.
குழம்பிற்கு கொடுத்திருக்கும் பொருட்களில் பச்சை மிளகாய், பாதி கறிவேப்பிலை தவிர மீதம் உள்ள மிளகாய் தூள், மல்லிதூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சோம்பு + சீரகம், தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து ஒரு கப் புளிச்சாறு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்திருக்கும் விழுது, புளிச்சாறு, தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு கொதிக்க விடவும். பச்ச வாசனை போனவுடன் முட்டையைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.