காடை குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காடை - 4

பெரிய வெங்காயம் - 2

கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லித் தழை - 3 கொத்து

புதினா - 5 கொத்து

கறிவேப்பிலை - 2 கொத்து

தயிர் - 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் - ஒரு மூடி

கசகசா - 2 மேசைக்கரண்டி

கலந்த மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி

மிளகுத் தூள் - ஒரு மேசைக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காடையை சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.

தேங்காயுடன் கசகசா சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரம் மசாலா தூள் போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும், தக்காளி, புதினா, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை போட்டு வதக்கவும்.

அதனுடன் சுத்தம் செய்து ஊற வைத்திருக்கும் காடையை போட்டு 2 நிமிடங்கள் பிரட்டிவிடவும். காடையுடன் கரம் மசாலா, வெங்காயம், தக்காளி எல்லாம் ஒன்றாகச் சேரும்படி பிரட்டிவிடவும்.

2 நிமிடங்கள் கழித்து காடை சற்று நிறம் மாறியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை பிரட்டவும்.

பிறகு மிளகாய் தூள் மற்றும் மிளகுத் தூள் போட்டு நன்கு கிளறவும்.

பின்னர் அரைத்த தேங்காய், கசகசா விழுது போட்டு கிளறவும்.

அனைத்தும் சேர்ந்து கிரேவி பதத்தில் திக்காக வந்ததும் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கிளறி, வாணலியை மூடி 15 நிமிடங்கள் வேகவிடவும்.

15 நிமிடம் கழித்து நன்றாக கொதித்ததும், கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதை நெய் சாதம், சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிடலாம்.