கறிவேப்பிலை மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
வஞ்சிரம் (அல்லது) ஏதேனும் முள்ளில்லாத மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 2
முழுப் பூண்டு - 1
புளிக் கரைசல் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
வறுக்க:
சோம்பு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் - 5 (அல்லது) 6
பூண்டு - 4 பல்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வதக்க:
கறிவேப்பிலை - 1 1/2 கப்
தேங்காய்பூ - 1 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1/4 கப்
கடுகு - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
மீனுடன் மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து, சிறிது உப்பு சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வறுக்கக் கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்தெடுத்து ஆறவிடவும்.
வதக்க வேண்டியவற்றை பச்சை வாசனை போக வதக்கியெடுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் வறுத்தவற்றுடன் வதக்கியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கவும். பிறகு வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அதனுடன் அரைத்த விழுது, புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும், மீனைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
மிளகு மற்றும் மிளகாய் அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
மீனுடன் உப்பு சேர்த்து ஊறவைப்பதால் குழம்பில் உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும்.
சூடான சாதம், இட்லி, தோசை ஆகிய அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.